இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்த கையோடு, இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நடக்க இருக்கும் ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவுள்ளது.
செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரில் ஆறு அணிகள் களமிறங்குகின்றன. இருப்பினும், 19-ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியின் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு திரும்பியிருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக இருப்பார் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், விராட் கோலி இந்திய அணியில் இல்லாதது எங்களுக்கு கூடுதல் பலம் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “என்னையும் விராட் கோலியையும் கம்பேர் செய்யவேண்டிய அவசியமே இங்கில்லை. அவர் எனக்கு சீனியர் மட்டுமல்லாது, கிரிக்கெட்டில் ஒரு லெஜண்ட். என் உடற்தகுதியில் மட்டும் எப்போதும் கவனம் செலுத்துகிறேன். அதுவே என்னை சிறப்பாக வழிநடத்த உதவுகிறது. விராட் கோலி இக்கட்டான சூழல்களில் இயல்பாக விளையாடுவார். அழுத்தங்களை சிறப்பாக கையாள்வார். அவர் இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது. அதனால், அவர் இல்லாதது எங்களுக்கு கூடுதல் பலம்தான்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக, துபாய் மைதானமும், சூழலும் எங்களுக்கு பழக்கமான ஒன்று. எனவே, எங்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என கேப்டன் சர்ஃபராஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.