Skip to main content

அந்த ஒரு கேட்ச்.. அந்த ஒரு ஓவர்.. - பெங்களூரு எப்படி தோற்றது?

Published on 08/05/2018 | Edited on 08/05/2018

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எஞ்சியிருந்த தன் கோப்பைக் கனவுகளை, நேற்றைய போட்டியில் கோட்டை விட்டிருக்கிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே தோல்வியைச் சந்தித்து வந்த பெங்களூரு அணி, ப்ளே ஆஃப்புக்குள் நுழையும் வாய்ப்பையும் நேற்றோடு தவற விட்டிருக்கிறது. 

 

RCB

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் நடைபெற்ற நேற்றைய போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கைத் தேர்வுசெய்தது. மிகப்பெரிய மைதானம், குறைந்த ரன்கள் மட்டுமே அடிக்கமுடியும் போன்ற கணிப்புகள் எல்லாவற்றையும் உண்மையாக்கும் விதமாக பெங்களூரு அணியின் பவுலர்கள் நேற்று பந்துவீசினர். இந்த சீசன் முழுக்க அவர்கள் தொலைத்திருந்த அந்த மேஜிக், திடீரென்று வெளிப்பட்டாற்போல் பளிச்சென்று இருந்தது. 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

 

RCB

 

 

 

மிகச்சொற்பமான இலக்கென்றாலும், ஐதாராபாத் அணியின் பந்துவீச்சைக் கணக்கில் கொள்ளும்போது, இது போதுமானதாகவே இருந்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி, தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாலும், வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தின் தடுமாற்றம் அதன் விளையாட்டில் தெளிவாக தெரிந்தது. கேப்டன் கோலி மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் ஷகீப் அல் ஹசான் வீசிய பந்தை அடிக்கமுயன்றபோது, தவறுதலாக பட்டு தேர்டுமேன் திசையில் பறந்தது. கிட்டத்தட்ட சர்க்கிளைக் கடக்க இருந்த அந்த பந்தை யூசுப் பதான் ஒற்றைக்கையால் கேட்ச் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சேஷிங்கில் கிங்கான கோலியின் அந்த விக்கெட் ஆட்டத்தையே மாற்றியது. பெங்களூரு அணிக்கு மீதமிருந்த ஒற்றை நம்பிக்கையான டிவில்லியர்ஸும் அடுத்த ஓவரிலேயே ரஷித்கானிடம் தன் விக்கெட்டைப் பறிகொடுத்து ஏமாற்றினார். 

 

RCB

 

நிதானமாக ஆடினாலே போதுமானது என்பதைப் புரிந்துகொண்டு விக்கெட்டைப் பறிகொடுக்காமல் பெங்களூரு அணி ஆட்டத்தைத் தொடர்ந்தது. மந்தீப் சிங் மற்றும் கிராண்ட்கோம் இணை கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுத்துச் சென்றது. கடைசி ஓவரில் ஐந்து விக்கெட்டுகள் மீதமிருக்க 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், புவனேஷ்வர் குமார் பந்துவீச வந்தார். பேட்ஸ்மேன்களின் லெக்பேட்களைக் குறிவைத்து வீசப்பட்ட யார்க்கர்கள் திணறடித்தன. அந்த ஓவரில் ஒரு பவுண்டரி கூட கொடுக்காத நிலையில், புவனேஷ்வர் வீசிய கடைசி பந்தில் கிராண்ட்கோம் கிளீன் பவுல்ட் ஆகினார். இதன்மூலம், ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி பரிதாபமாக தோற்றது. 

 

இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் மெர்சல் காட்டிய புவனேஷ்வர் குமார் பலரது மனதையும் கவர்ந்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கு ஓய்வு தரும்படி ஐதராபாத் அணி நிர்வாகத்திற்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

தங்கராசு நடராஜனை தங்கத்தால் ஜொலிக்க வைத்த சன் ரைசர்ஸ்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 Sunrisers made Thangarasu Natarajan shine with gold!

தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு சன் ரைசர்ஸ் அணியால் 80 சவரன் தங்க சங்கிலியுடன் கூடிய மெடல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 
 
ஐபிஎல் 2024இன் 35 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே கடந்த 20 ஏப்ரல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வழக்கம் போல அட்டகாசமாய் ஆரம்பித்தது. பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து, பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி என்கிற கொல்கத்தா அணியின் சாதனையை முறியடித்தது. ஹெட் 32 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். நித்திஷ் ரெட்டி 37, ஷபாஸ் அகமது 59 என மிரட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், அக்சர், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் இமாலய இலக்கை எதிர்கொண்ட டெல்லி அணிக்கு அந்த அணியின் ஜேக் ஃப்ரேசர் 65 அபிஷேக் பொரேல் 42, பண்ட் 41 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய நடராஜன் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முன்னாள் வீரர் புவனேஷ்வர் குமார் உட்பட மூத்த வீரர்கள் பலரும் அவரது பந்து வீச்சைப் பாராட்டினர்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்பு ட்ரெஸ்ஸிங் ரூமில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைப் பாராட்டி அந்த அணியின் வீரர்கள் கவுரவிக்கப்படுவதும், அதை வீடியோ எடுத்து அணிகள் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவதும் தற்போது டிரெண்டாகி வருகிறது. மற்ற அணிகள் சிறிய அளவிலான தங்க பேட்சுகள் மற்றும் இதர பரிசுகளை வழங்கி வருகிறது. ஆனால், சன் ரைசர்ஸ் அணி ஒருபடி மேலே போய் ஒரு பெரிய தங்க சங்கிலியையே பரிசாக நடராஜனுக்கு வழங்கி கவுரவம் செய்துள்ளது. 80 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலியை நடராஜனுக்கு அணிவித்து, அவர் அந்த சங்கிலியுடன் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.