ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பைகளை வாங்கிய இந்திய அணியில் இடம்பெற்றவர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். சர்வதேச அளவில் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் களமிறங்கிய அவர், பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஒருகாலத்தில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக இருந்தவர் ஹர்பஜன். ஜூலை 3, 1980ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த அவருக்கு இன்று 38ஆவது பிறந்ததினம். கிரிக்கெட் உலகினர் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வித்தியாசமான முறையில் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், ஹர்பஜனிடம் ஆசி பெறுவது போன்ற பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட் என தமிழில் வாழ்த்தியுள்ளார்.
விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்? pic.twitter.com/UYOiCQF4mO
— Sachin Tendulkar (@sachin_rt) July 3, 2018
கடந்த சில மாதங்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக இளைஞர் ஒருவரின் உதவியோடு ஹர்பஜன் பல்வேறு ட்வீட்டுகளை தமிழில் பதிவிட்டு வந்தார். குறிப்பாக, ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஹர்பஜன் சிங், ஒவ்வொரு போட்டியிலும் தமிழில் ட்வீட் செய்து அசத்தியதால் நெட்டிசன்கள் மத்தியிலும் கவனம் பெற்று, தமிழ்ப்புலவர் போலவே மீம்ஸ்களில் இடம்பெற்றார். இந்நிலையில், அவருக்கு சச்சின் தெண்டுல்கர் தமிழில் வாழ்த்தியிருப்பது பலரிடமும் கவனத்தைப் பெற்றுள்ளது.