அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அயர்லாந்து கிரிக்கெட் அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி, டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் முதல் டி20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.
ஓப்பனிங் வீரர்களான ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இணை மிகச்சிறப்பாக ஆடியது. அந்த இணை 160 ரன்கள் குவிக்க, ஷிகர் தவான் ஓ பிரெய்ன் பந்தில் வெளியேறினார். அதற்கடுத்து இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. 97 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா, நூலிழையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சதத்தை மிஸ் செய்தார்.
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ் மற்றும் சகார் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். அவர்கள் முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தனர். 9 விக்கெட் இழந்த அயர்லாந்து அணி, 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.