2018 ஆம் ஆண்டுக்கான பிபா உலக கோப்பை போட்டி நாளை தொடங்க உள்ளது. இதனால் உலகம் முழுவதும் இருக்கும் கோடான கோடி ரசிகர்கள் விளையாட்டு போட்டிகளை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர். இந்த ஆண்டு நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டியில் இந்தியா தேர்வாகவே இல்லை, இருந்தாலும் இந்தியாவில் அதிகப்படியான கால்பந்தாட்ட ரசிகர்கள் இருப்பதனால் இந்தியாவிலும் கால்பந்து பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டின் மாயவலையினால் கால்பந்தின் நிழல் மட்டும்தான் தெரிகிறது என்று கூட சொல்லலாம். இந்தியாவில் கால்பந்து விளையாட்டும், பார்க்கப்படும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்தியாவும் வருங்காலங்களில் பிபா உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் என்ற பலரின் எண்ணம் நிறைவேறும் என்று நம்புவோம். இதுவரை இந்தியா கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடியதே இல்லையா? என்று வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் 1950 ஆண்டு பிரேசிலில் நடந்த கால்பந்து உலகக்கோப்பையில் இந்தியா கலந்துகொள்ள இருந்திருக்கிறது. ஆனால், போட்டிகள் தொடங்க இருக்கும்போது அதிலிருந்து விலகிக்கொண்டது.
இந்தியா பிரேசில் உலகக்கோப்பையில் கலந்துகொள்ள காரணமாக இருந்தது பல நாடுகளின் அணிகள் அதில் கலந்துகொள்ளவில்லை, ஆதலால் இந்தியாவை நீங்கள் விளையாடியே ஆக வேண்டும் என்று அழைத்தனர். அப்போது இந்தியா குரூப் மூன்றில் சுவீடன், இத்தாலி மற்றும் பராகுவே அணிகளுடன் களம் இறங்க இருந்தது. 1950 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி பராகுவே வுடன் முதல் போட்டியை தொடங்கி ஜூலை 13 ஆம் தேதியில் முடிவதாக அட்டை பட்டியலிடப்பட்டிருந்தது. ஸ்காத்லாந்து, பிரான்ஸ் மற்றும் செக்கோஸ்லோவேகியா போன்ற எந்த அணிகளும் கலந்துகொள்ளாததால் 13 அணிகளே கலந்துகொள்வதாக இருந்தது. அதிலும் ஆசியாவில் இந்தியாவை தவிர்த்து வேறு எந்த அணியும் கலந்துகொள்ளவில்லை. பிரேசில், இந்தியாவை அவர்கள் நாட்டுக்கு அழைத்து வருவது போன்ற அனைத்து செலவுகளையும் ஏற்று கொள்வதாக இருந்தது.
கடைசியில் என்ன நடந்ததோ தெரியவில்லை இந்தியா போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே விலகிக்கொண்டது. பல வருடமாக இதற்கு காரணமாக, இந்திய வீரர்கள் காலணி அணிந்து ஆடமாட்டார்கள் என்று சொன்னதாக ஒரு வதந்தி உண்டு. மேலும் நிதி பற்றாக்குறை, பயிற்சி இன்மை என்ற பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தது. அதிலிருந்து உலகக்கோப்பைக்கு இந்தியா தேர்வாகவே இல்லை. ஒருவேளை இந்தியா அந்த போட்டியில் கலந்துகொண்டிருந்தால் அதுவே ஒரு உத்வேகமாக உருவெடுத்து காலப்போக்கில் ஒரு நல்ல அணியாக மாறியிருக்க கூடும். ஆனால், தற்போது வரை இந்தியா உலகக்கோப்பையில் கலந்துகொள்வதே கேள்விக்குறியாக தான் இருக்கிறது.