தோனி குறித்து என்னுடைய சகவீரர் கூறியது உண்மை தான் என்பதை தற்போது உணர்ந்துகொண்டேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் மற்றும் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் தோனி. இவர் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. இந்திய அணிக்கு மகத்தான பங்களிப்பு அளித்த தோனிக்காக ஒரு போட்டி நடத்தி அதில் அவருக்கு முறைப்படி பிரியா விடைகொடுக்க வேண்டும் என பல நாடுகளைச் சேர்ந்த மூத்த வீரர்கள் கோரிக்கை வைத்தனர். பிசிசிஐ-யும் இந்த கோரிக்கையை கவனத்தில் எடுத்து பரீசிலிக்க இருப்பதாக கூறியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "தோனியின் மன வலிமை மற்றும் தலைமைப்பண்பு சவுரவ் கங்குலி கற்றுக்கொடுத்தது. தோனி கால்பந்து சிறப்பாக விளையாடக் கூடியவர், அவர் ஒரு கோல் கீப்பர் என்றுதான் முதலில் கேள்விப்பட்டேன். கென்யா சுற்றுப்பயணத்தில் இருந்த தன்வீர் அகமது என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தார். அப்போது பேசும்பொழுது தோனி என்று ஒரு வீரர் இருக்கிறார். அவர் சச்சின் குறித்து இந்திய மக்களை மறக்கடிக்க செய்துவிடுவார் என்றார். எப்படி ஒரு வீரரால் சச்சினுக்கு நெருக்கமாக வர முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தற்போது தோனிக்கென்று இந்தியாவில் உள்ள பிம்பத்தை பார்க்கும்போது அவர் சச்சினை நெருங்கிவிட்டார் என்று தான் தோன்றுகிறது" என்றார்.