இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தோனியின் ஆட்டம் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் சிலர் தோனி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் தோனிக்கு ஆதரவாகவும் பல பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தோனி குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார்.
தோனி குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "தோனியை எப்போதும் சந்தேகிக்கக் கூடாது என்பதை மக்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இதை நான் திரும்பத் திரும்ப எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லுவேன். சிறந்த வீரர்களை மக்கள் சந்தேகிக்க கூடாது. தோனி சிறந்தவர். இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. தோனியை தவறவிட்டுவிடாதீர்கள். அவரை பாதுகாத்து வையுங்கள். அரையிறுதி, இறுதி போட்டிகளில் அவரது பங்கு மிக முக்கியமானது" என தெரிவித்துள்ளார்.