ஐபிஎல் 2024 இன் 8ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்த ஹெட் தொடர்ந்து தனது அதிரடியை காட்டினார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த ஹெட் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார். அவருடன் இணைந்த அபிஷேக் ஷர்மா ஹெட்டை மிஞ்சும் அளவுக்கு அதிரடியில் கலக்கி 7 சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
பின்னர் மார்க்ரம் மற்றும் கிளாசன் இணைந்தனர். அவர்களும் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். கிளாசனும் தன் பங்கிற்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இறுதியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு கிறிஸ் கெயில் 175 ரன்கள் குவித்த அந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 263 ரன்களே சாதனையாக இருந்து வந்தது. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கி 2 ஓவர்கள் முடிவில் 27 ரன்கள் எடுத்துள்ளது.