தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியதன் காரணமாக இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியிலும் சிறப்பான பந்து வீசிய நடராஜனின் வெற்றி தமிழகத்தையே உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆனால் தற்போது காயம் காரணமாக நடராஜன், இந்திய அணியில் இடம்பெற முடியாமல் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் அவர், தனது சொந்த ஊரில் சகல வசதிகளுடனும் கூடிய ஒரு கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருகிறார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கிரிக்கெட் மைதானத்தை அமைக்கிறேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கு நடராஜன் கிரிக்கெட் மைதானம் (NCG) என பெயர் சூட்டப்படும். கனவுகள் மெய்ப்படும். கடந்த ஆண்டு டிசம்பரில் நான் இந்திய அணியில் அறிமுகமானேன், இந்த ஆண்டு (டிசம்பர்) கிரிக்கெட் மைதானத்தை அமைக்கிறேன். கடவுளுக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.