இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சில உலகநாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர்களை அனுப்பி உதவி வருகின்றன. மேலும் சில நாடுகள் உதவுவதற்கு முன்வந்துள்ளன.
இந்தநிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ், கரோனா நிவாரணத்திற்காக 50 ஆயிரம் டாலர்களை "பி.எம் கேருக்கு" வழங்கியுள்ளார். முக்கியமாக இந்திய மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக இந்தநிதியை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மற்ற கிரிக்கெட் வீரர்களையும், உதவி வழங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் வருடக்கணக்காக நேசித்து வரும் நாடு இந்தியா. நான் சந்தித்த மக்களில் அன்பான, கனிவான மக்களில் இங்குள்ளமக்களும் அடங்குவர்" என கூறியுள்ளார். அதிகமான மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ள அவர், " கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகையில் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவது பொருத்தமா என்ற விவாதம் இங்கு நடக்கிறது. மக்கள் பொதுமுடக்கத்தில் இருக்கும்போது, ஐபிஎல்லை நடத்துவது, தினமும் சில மணிநேரங்களுக்கு மகிழ்ச்சியையும், தற்காலிக நிம்மதியையும் தருவதாகவும், இல்லையென்றால் இது நாட்டிற்கு கடினமான நேரமாக இருந்திருக்கும் என இந்திய அரசு கருதுவதாகவும் எனக்கு கூறப்பட்டது" என கூறியுள்ளார்.
"எனது சக ஐபிஎல் வீரர்களையும், உலகமுழுவதுமுள்ள இந்தியாவின் உணர்ச்சியாலும், அதன் பெருந்தன்மையாலும் கவரப்பட்ட அனைவரையும் (நிதியுதவி) பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் உதவியற்றவர்களாக உணர்வது எளிது. இது தாமதமானது என நான் உணர்கிறேன். இருப்பினும் பொதுவெளியில் நான் விடுக்கும் கோரிக்கையின் மூலம், நமது உணர்வுகள் அனைத்தும் செயாலாக மாறி, மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் என நம்புகிறேன். எனது நிதியுதவி பெரிய அளவிலானது அல்ல என்பது எனக்கு தெரியும். ஆனால் அது ஒருவருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்" எனவும் பட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.