இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், லெஜெண்ட்ஸ் வித் அன்அகாடமி ( legends with unacademy) என்ற யூடியூப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். அதில் முதன்முதலில் விராட் கோலியை சந்தித்தபோது நடந்தது பற்றியும், களத்தில் பதற்றத்தை சமாளித்தது குறித்தும் பேசியுள்ளார்.
ஏற்கனவே, விராட் கோலி ஒரு பேட்டியில், "முதன்முதலில் நான் இந்திய அணிக்குள் நுழைந்தபோது யுவராஜ் சிங், இர்பான் பதான், முனாப் படேல் ஆகியோர், கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கும் வீரர்கள் சச்சினின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும் என கூறினர், அதை நம்பி நானும் செய்தேன், பின்னரே அது பிராங்க் என உணர்ந்தேன்" எனக் கூறியிருந்தார்.
இந்தநிலையில் இதுகுறித்து பேசிய சச்சின், "விராட் காலில் விழுந்தபோது எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவைல்லை. என்ன செய்கிறாய் என கேட்டேன்... இதெல்லாம் தேவையில்லை. இதுபோன்ற விஷயங்கெல்லாம் இங்கு நடக்காது என கூறினேன். அப்போது மற்ற வீரர்கள் சிரிக்க தொடங்கினர்" என கூறியுள்ளார்.
மேலும் மனநலன் குறித்தும், பதட்டத்தை கையாண்டது குறித்தும் பேசிய சச்சின், "காலப்போக்கில், ஒரு விளையாட்டுக்கு உடல்ரீதியாக தயாராவது தவிர, மன ரீதியாகவும் தயாராக வேண்டும் என்பதை உணர்ந்தேன். நான் ஆடுகளத்தில் நுழைவதற்கு முன்பாகவே எனது மனதில் போட்டி தொடங்கிவிடும். பதற்றம் மிக அதிகமாக இருக்கும். நான் 10 முதல் 12 ஆண்டுகளுக்கு பதற்றத்தை உணர்ந்தேன். போட்டிக்கு முன்பு நிறைய நாட்கள் தூங்கமாட்டேன். பிறகு நான் அதை போட்டிக்கு தயாராகும் முறையில் ஒன்றாக ஏற்றுக்கொண்டேன். அதன்பிறகு துக்கம் வரவில்லையென்றால், எனது மனதை அமைதிபடுத்த தொடங்கினேன். நான் எனது மனதை நன்றாக வைத்துக்கொள்ள எதையாவது செய்துகொண்டிருப்பேன்" என தெரிவித்துள்ளார்.