சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இண்டியன்ஸ் அணி.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின. சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய மும்பை இண்டியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது.
மும்பை இண்டியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக டி காக் - 40, பொல்லார்ட் - 35, ரோஹித் சர்மா - 32 ரன்களை சேர்த்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் விஜய் சங்கர், முஜீபுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளையும், காலில் அஹ்மத் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தனர்.
அதைத் தொடர்ந்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இண்டியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ - 43, டேவிட் வார்னர் - 36 ரன்களை எடுத்தனர். அதேபோல் மும்பை இண்டியன்ஸ் அணி தரப்பில் ராகுல் சாஹர், ட்ரெண்ட் பெளல்ட் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, க்ருணாள் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். மும்பை அணியின் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம், நான்கு புள்ளிகளோடு மும்பை இண்டியன்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.