இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ட்ரா ஆன நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது.
இந்தநிலையில் இரு அணிகளுக்குமிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்ய இந்தியா 78 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதன்பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 432 ரன்களை குவித்தது.
இதனைத்தொடர்ந்து 354 ரன்கள் பின்நிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா,தொடக்கத்திலேயே கே.எல் ராகுலை இழந்தது. இருப்பினும் புஜாரா மற்றும் ரோகித் சிறப்பாக ஆடினர். ரோகித் சர்மா அரை சதத்தை கடந்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த புஜாராவும் கோலியும் நிலைத்து நின்று ஆடினர்.
மூன்றாவது நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் புஜாரா 91 ரன்களிலும், கோலி 45 ரன்களிலும் களத்தில் இருந்தனர். இந்தநிலையில் நான்காவது நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா மேற்கொண்டு ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அரைசதமடித்த கேப்டன் கோலியும் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜடேஜா மட்டும் 30 ரன்களை அடித்தார்.
இறுதியில் இந்தியா 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.