சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான விதிகளில் ஐசிசி அமைப்பு தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, காயம் காரணமாக ஒரு வீரர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக வரும் மாற்று வீரரும் பேட்டிங், பவுலிங் செய்யலாம், தாமதாக பந்துவீசும் அணியின் அனைத்து வீரர்களுக்கும் இனி ஒரே மாதிரியான தண்டனை வழங்கப்படும் என பல புதிய விதிகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது பிசிசிஐ கொடுத்த ஐடியா ஒன்றையும் ஐசிசி புதிய விதியாக சேர்க்க உள்ளது. அம்பயர் தவறான முடிவுகளை கொடுத்தாலும் வீரர்கள் ரிவியூ மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம். ஆனால் கொடுக்கப்பட்ட ஒரு ரிவியூ முடிந்துவிட்டால், மீண்டும் அம்பயரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது.
இந்நிலையில் பந்துவீச்சின் போது நோ-பால் போடுவதை நடுவர்கள் கவனிக்காமல் அவுட் கொடுத்துவிடுவதால் பல முறை பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகின்றனர். எனவே இதனை தவிர்க்கும் விதமாக விக்கெட் விழும் போது எல்லாம் அது நோபால் தானா என்று நடுவர்கள் ஆராய வேண்டுமென்ற விதியை ஐசிசி கொண்டு வரவேண்டுமென பிசிசிஐ வலியுறுத்தியது. பிசிசியின் இந்த வேண்டுகோளை ஐசிசி தற்போது ஏற்றுள்ளது.