தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி கடந்த 5ஆம் தேதி முதல் இன்று (11.11.2024) வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் ௮ சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியின் மொத்த பரிசுத் தொகையான ரூ. 70 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது.
இப்போட்டி 7 சுற்றுகளைக் கொண்டு ரவுண்டு ராபின் (Round Robin) முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்பட்டது. இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைரி தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவைச் சேர்ந்த லெவோன் ஆரோனின் உட்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் பங்குபெற்றனர். இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்த வெற்றி தொடர்பாக அரவிந்த் சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த போட்டியில் என்னுடன் மோதிய அர்ஜூன் எரிகைரி சவாலாக விளங்கினார். அடுத்ததாக கத்தார் மாநிலத்தில் நடைபெற உள்ள போட்டியில் கலந்துகொள்ள உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். மாஸ்டர்ஸ் பிரிவில் வெற்றிபெற்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு ரூ. 15 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.