சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 26ஆம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நடைபெற உள்ளது. ஜூலை 26ஆம் தேதி தொடங்கும் இந்த ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தச் சர்வதேச போட்டியில், உலகம் முழுவதும் உள்ள 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து பல்வேறு வீரர், வீராங்கனைகள் அங்கு சென்றிருக்கின்றனர். அந்த வகையில், 6 பேர் பங்கேற்கக் கூடிய வில் வித்தை அணியும் அங்கு சென்றிருக்கிறது. ஆடவர் பிரிவில் தருண் தீப் ராய், பிரவீன் ஜாதவ், தீரஜ் பொம்ம தேவர் ஆகியோர் பங்கேற்கின்றனர். மகளிர் பிரிவில் தீபிகா குமாரி, பஜன் கவுர், அன்கிதா பகத் ஆகியோர் இந்த வில் வித்தை போட்டியில் இடம் பெற்றுள்ளனர். அவர்களோடு தென் கொரியாவை சேர்ந்த இந்திய வில் வித்தை பயிற்சியாளர் பேக் வூங்கியும் அங்கு சென்றிருக்கிறார்.
பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், இந்திய வில் வித்தை சங்கத்தின் உடைய தலைமை பயிற்சியாளர் பேக் வூங்கிக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவரை மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப அழைப்பதற்கு இந்திய வில் வித்தை சங்கம் டிக்கெட் புக் செய்திருக்கிறது. இது குறித்து இந்திய வில் வித்தை பயிற்சியாளர் பேக் வூங்கி கூறியதாவது, “இந்தியா வர விருப்பம் இல்லை. தாய்நாடான தென் கொரியாவுக்கு செல்ல விரும்புகிறேன்” என வேதனையுடன் தெரிவித்தார்.