இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4க்கு 1 என இந்தியா அணி கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (06.02.2025) தொடங்குகிறது.
அதாவது முதல் ஒருநாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பிற்பகல் 01.30 மணிக்குத் தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக நடைபெறும் ஒரே ஒரு தொடர் இது என்பதால் இரு அணிகளும் வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் களமிறங்க உள்ளன. எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒரு நாள் தொடரை அடுத்து 2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அதன்படி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி மார்ச் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 23ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. முன்னதாக பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது. அதே சமயம் இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.