அமீரகத்தில் நடைபெற்று வரும் 13 -ஆவது ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி, தொடர் தோல்விகளால் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 4 வெற்றிகள், 8 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும், அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்து, முதல் சுற்றிலேயே சென்னை அணி வெளியேறியது இதுவே முதல் முறையாகும். தோனியின் ஆட்டம் மற்றும் அணியை வழிநடத்தும் திறன் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்த ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்தது. சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன், அடுத்த ஆண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனியே தொடர்வார் என விளக்கம் அளித்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், சென்னை அணி மற்றும் தோனிக்கு இடையேயான உறவு குறித்துப் பேசியுள்ளார்.
அதில் அவர், "சென்னை அணி சென்னை மாதிரியே இருக்கிறது என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதற்கான காரணம், தோனிக்கும், அணியின் உரிமையாளருக்கும் நெருக்கமான உறவு இருப்பதுதான். சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையை அவர்கள் தோனிக்கு வழங்கியுள்ளனர். பரஸ்பர மரியாதையையும் அணி உரிமையாளர்கள் தோனிக்கு கொடுக்கிறார்கள். அணி நிர்வாகத்தினரின் இத்தகைய மரியாதைகளுக்கு தோனி தகுதியானவரே. எனவே 2021-ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு தோனியே கேப்டனாக தொடர்வார் என்பதில் எனக்கு வியப்பேதும் இல்லை" எனக் கூறினார்.