Skip to main content

பார்வையாளர்கள் இல்லாததால் இப்படி ஒரு சிக்கலா! விநோதங்கள் பல நிகழ்ந்த AUS Vs NZ ஆட்டம்...

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

கரோனா பரவல் காரணமாகப் பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு பல நாடுகளிலும் அரசாங்கங்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், பார்வையாளர்கள் இன்றி நடைபெற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தேறின.

 

first ever closed door cricket match between aus vs nz

 

 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. மைதானத்தில் ரசிகர்கள் இன்றி நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே பல மாறுபட்ட நிகழ்வுகளைக் காணமுடிந்தது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு அணி வீரர்கள் மற்றும் கேப்டன்களும் கைகொடுப்பதற்குப் பதிலாக வெவ்வேறு செய்கைகள் மூலம் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். அதன்பின் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. பேட்ஸ்மேன்களின் அசத்தலான ஷாட்கள், பந்துவீச்சாளர்களின் அற்புதமான டெலிவரிகள் என எதற்குமே விசிலடித்து ஆர்ப்பரிக்க மைதானத்தில் யாருமில்லை. அதேபோல பார்வையாளர்கள் இல்லாததால் சிக்சர்களுக்கு அடிக்கப்பட்ட பந்துகளை  வீரர்களே சென்று தேடி எடுக்கும் சூழலும் உருவானது.

நாற்காலிகளுக்கு அடியில் அடிக்கப்பட்ட பந்துகளை வீரர்கள் தேடி எடுத்து மீண்டும் ஆட்டம் தொடர்ந்து நடந்தது. மேலும், விக்கெட்டுகள் விழும்போதும் ஃபீல்டிங் அணியின் வழக்கமான கொண்டாட்ட முறைகளிலும் மாற்றம் காணப்பட்டது. வீரர்கள் ஒருவரையொருவர் தொட்டுக்கொள்ளாத வகையிலேயே பெரும்பாலும் கொண்டாட்டங்கள் அமைந்தன. பார்வையாளர்கள் இன்றி நடைபெற்ற முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியான இது ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் ஒரு புதுவித அனுபவமாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.