இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் குறித்து யுவராஜ் சிங் சாதிய ரீதியாக விமர்சித்ததாகச் சர்ச்சை எழுந்த நிலையில், இதற்கு யுவராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மாவுடன் நேரலையில் உரையாடும் போது, வட இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பிரிவு மக்களைக் குறிப்பிடும் ஒரு வார்த்தையைக் கூறி சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் பற்றிப் பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக யுவராஜ் சிங் மீது ஹரியானா மாநிலம் ஹிசார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு, வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் யுவராஜ் வெளியிட்டுள்ள பதிவில், "நான் ஒருபோதும் இந்த நாட்டு மக்களிடையே சாதி, நிறம், பாலினபாகுபாடுடன் பழகியதில்லை. நான் என்னுடைய வாழ்நாளை மக்கள் நலனுக்காகவே செலவிடவே விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதனை நான் மதிக்கிறேன். நான் என்னுடைய நண்பரிடம் பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது. ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் மிகவும் புனிதமானது" எனத் தெரிவித்துள்ளார்.