உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
1987-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி ரஷ்யாவில் பிறந்த மரிய ஷரபோவா, கடந்த 1994-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகிறார். 2004-ம் ஆண்டு தனது 17-வது வயதில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடிய மரியா ஷரபோவா தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை பெற்றார். 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா டென்னிஸை போல மாடலிங் துறையிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி, ஆஸ்திரேலியன் ஓபன், பிரெஞ்சு ஓபன் என அனைத்து வகையான தொடர்களிலும் ஷரபோவா பட்டங்களை வாங்கி குவித்துள்ளார். தனது 18-வது வயதில், உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஷரபோவா, 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு அவ்வப்போது காயங்களால் அவதிப்பட்டு வந்ததோடு, தனது பழைய ஃபார்முக்கு வர முடியாமலும் தவித்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபனில் விளையாடும்போது, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இவருக்கு சர்வதேச ஊக்கமருந்து தடை அமைப்பு 15 மாதங்கள் டென்னிஸ் விளையாட தடை விதித்தது. தடை முடிந்து மீண்டும் டென்னிஸுக்கு திரும்பிய 32 வயதான ஷரபோவா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக டென்னிஸ் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்த மரியா ஷரபோவாவின் திடீர் ஓய்வு அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.