உலகக்கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அந்த அணி இந்திய ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கியது. குல்தீப் மற்றும் சாஹல் ஓவர்களில் 140 ரன்களுக்கு மேல் அடித்து அதிரடி காட்டியது இங்கிலாந்து அணி. 337 ரன்களை அடித்த அந்த அணி 338 என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து ஆடிய இந்திய அணி ரன்கள் எடுக்க திணறிய நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய அணியின் இந்த தோல்வியை பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இதுகுறித்து கூறுகையில், "இந்திய அணியின் தோல்விக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் ஆட்டம். மற்றொன்று கடைசி 5 ஓவர்.
338 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடும் போது பவர் பிளேவில் வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருக்க கூடாது. அப்போது ஆடிய கோலி, ரோகித் சர்மா ஜோடி இன்னும் சிறப்பாக அடித்து ஆடியிருக்க வேண்டும். அதேபோல், ஓவருக்கு 13 ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலையில் தோனி - கேதர் ஜாதவ் ஜோடி சிங்கிள் எடுத்தனர். இவைதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தன” என்று தெரிவித்துள்ளார்.