Skip to main content

மஞ்சள் மச்சான்ஸ்க்கு சென்னை வெயிட்டிங்!  CSK வீரர்கள், ஒரு பார்வை       

Published on 29/03/2018 | Edited on 29/03/2018

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களின் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளை முடித்துவிட்டு ஐபில் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவா ஒரு விளையாட்டுனா அடுத்து நடக்கப் போற தொடருக்கு விளையாட்டு சார்ந்த பயிற்சியை தான் ஆரம்பிப்பாங்க. ஆனா ஐபிஎல்-ல மட்டும் தாங்க, டான்ஸ், பாட்டு, சந்தோசம், கண்ணீர்னு ஒரு மசாலா படம் பாக்குற அனுபவத்திற்கு, மேட்ச் ஆடுற அவங்களும் பாக்குற நம்மளும் தயாராவோம்.

 

CSK team arrival



அவரவர் அணியோடு இணையுறது, அப்புறம் அந்த சூழலுக்கு மாறுவது, அந்த அணியின் விளம்பரத்துக்கு போடாத வேஷம்லாம் போடுறது, பாட்டு பாடுறது, டான்ஸ் ஆடுறதுனு எல்லா டீமும் தங்கள் வேலையை ஆரம்பிச்சாச்சு. நம்ம சென்னை அணி தன்னோட 2018ஆம் ஆண்டு ஐபிஎல்க்கு தயாராவதற்காக ஒன்னு கூட ஆரம்பிச்சுட்டாங்க. வரவேற்பு, கொஞ்சம் வலைப்பயிற்சின்னு ஆரம்பிச்சு இப்போ விளம்பரம், ஆட்டம், பாட்டம்னு தன் ஆட்டத்தை ஆரம்பிச்சுடுச்சு நம்ம மஞ்சள் அணி. (விளையாட்டுக்கு இன்னும் நாள் இருக்கு).
 

csk team 2018



மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நம்ம சென்னை அணி ரெண்டு வருஷ தடைக்குப் பிறகு கிரிக்கெட் விருந்து வைக்க தயாராகிட்டு இருக்கு. கேப்டன் கூல் தல தோனி, சின்ன தல ரெய்னா, சர் ரவீந்திர ஜடேஜா எல்லாம் சிஎஸ்கேவின் அடையாளமாக இருக்காங்க. அவங்க திரும்பி வந்ததுல ரசிகர்கள் குஷியா இருக்காங்க. இவங்களுக்கு அடுத்து  டுவெய்ன் பிராவோ சென்னை அணியின் எண்டர்டெயினர். இவர் மைதானத்துல போடுற ஆட்டமும் மைதானத்துக்கு வெளில போடுற ஆட்டமும் செம்ம பேமஸ். 'நீலவானம் நீலவானம்'னு 'உலா' தமிழ் படத்துல வர்ற ஒரு பாட்டுல இவரு பாடி ஆட்டம்போட்டது ஒரு  ரகம்னா, ஒரு விக்கெட் எடுத்துட்டு இவர் போடுற ஆட்டம் இன்னொரு ரகம். இவருக்குத் துணையா இப்போ நம்ம ஹர்பஜன் சிங்கும் வந்து இணைஞ்சிருக்கார். 'ஏக் சுநேஹா'னு  தேசபக்தியோட விடுதலைப்  போராட்ட வீரர் பகத் சிங்   நினைவாக ஒரு பாட்டு  பாடிவிட்டு, தமிழ்ல தலைவர் வசனத்தோட 'வந்துட்டேன்னு சொல்லு'னு ட்வீட் போட்டு ஒரு கலக்கு கலக்கிட்டாரு. 

 

bravo dance



மண்ணின் மைந்தர் முரளி விஜய் டெஸ்ட் போட்டி போல T20 லயும் கலக்குறதுக்கு ஆவலோடு இருக்குறார். பேட்டிங்ல மட்டும் இல்லை ஷூட்டிங்லயும்தான். இன்னும் தென்னாபிரிக்க ஆளுங்களத்தான் காணோம். ஆஸ்திரேலியா கூட டெஸ்ட் மேட்ச் ரணகளமா முடிச்சுட்டு வர்றாங்க டூப்ளஸிஸ் மற்றும் லுங்கி நிகிடி. ஒரு விக்கெட் எடுத்தால் ஒன்றை கிலோமீட்டர் ஓடுற இம்ரான் தாஹிர் டான்ஸ் ஆடுறாரோ இல்லையோ நல்லா ஓடுவாரு. இந்திய அணியில் அப்பப்போ வாய்ப்பு கிடைச்ச வீரர்கள் கேதார், அம்பத்தி ராயிடு, கரண் சர்மா, ஷரதுல் மற்றும்  வாய்ப்புக்  கிடைக்கக் காத்திருக்கும் இன்னொரு மண்ணின் மைந்தர் நம்ம கோயம்புத்தூர் தம்பி நாராயணன், டோனி ஊர்க்காரர் மொனு குமார்லாம் இருக்காங்க.

 

dhoni fan saravanan



அணியின் உள்ளே விளையாட யார் யார்க்கு  வாய்ப்புகள் கிடைக்கும்ன்னு தெரியல. ஆனா, கொண்டாட எல்லாருக்கும் வாய்ப்பு இருக்கு. நமக்கு? நாம தான் என்னனாலும் பார்த்துட்டே இருப்போமே. ஏற்கனவே சிஎஸ்கேகாக தீம் பாடல், வீடியோ, மீம்ஸ் எல்லாம் போட்டு யூ-ட்யூப், ஃபேஸ்புக் எல்லாம் கலக்க ஆரம்பிச்சுட்டாங்க நமது மக்கள். இன்னொரு பக்கம், மஞ்சள் டீ-ஷர்ட், மஞ்சள் ஷூ, மஞ்சள் பெல்ட்னு வகை தொகையில்லாமல் மஞ்சளை வாங்கி ரெடியாகிக்கிட்ருக்காங்க ரசிகர்கள். இன்னும் ஒரு வாரத்துல எல்லோரும் மஞ்சள் லைட்டை போட்டுட்டு கூட்டம் கூட்டமா கெளம்பிருவாங்க போல. 

என்னதான் வயசான டீம்னு சொன்னாலும் அதே அழகு அதே ஸ்டைல்னு கெத்தா ஆடுவாங்க நம்ம பசங்க (அட சின்ன பசங்களும் இருக்காங்கப்பா டீம்ல). பொறுத்திருந்து பார்ப்போம்... நமக்கு  தலைவாழை விருந்தா இல்லை டீயும் பன்னுமானு. மொத்தத்தில் மஞ்சள் மச்சான்கள் களத்தில் கலக்குவதை காணக் காத்திருக்கிறது ரசிகர் பட்டாளம்.

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.