8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் முடிந்து 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. முதல் பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் இரண்டாம் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தகுதி பெற்றன.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆடிய முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்நிலையில் இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் மற்றும் மசூத் மட்டும் பொறுமையாக ஆடி ரன்களை எடுக்க மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்தது.
138 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியில் இந்தியா உடனான போட்டியில் அதிரடி காட்டிய அலெக்ஸ் ஹேல்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, பின் வந்த பிலிப் 10 ரன்களில் வெளியேறினார். ஜாஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். 19 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்து இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது.