ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் போதான ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐ.பி.எல். மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களில் விளையாடவில்லை.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ள அணிகளின் வீரர்கள் பட்டியல் மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலக்கப்பட்டுள்ளார். ஆசஸ் மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து பேசியுள்ள மிட்செல் ஸ்டார்க், “ஐ.பி.எல். போன்ற உலகளாவிய டி20 தொடர்களில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இதன்மூலம் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், என் இப்போதைய தேவையெல்லாம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி, அதில் என் திறன்களை மேம்படுத்திக் கொள்வது மட்டுமே. அதற்காகவே கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்” என விளக்கமளித்துள்ளார்.