Skip to main content

கோலிக்கு ரெஸ்ட்.. ரகானே கேப்டன்! - இரண்டாவது டெஸ்டில் என்னென்ன மாற்றங்கள்?

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
India

 

 

 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பின்னர், இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தன்னை நிரூபித்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும், சொந்த மண்ணில் எப்போதும் புலியாகவே செயல்படும் இந்திய அணி இந்த வாய்ப்பு அத்தனை பெரிய விஷயம் கிடையாது என்பதுதான் உண்மை. மூன்று நாட்களுக்கு உள்ளாகவே மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சுருட்டி, பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து ஃபார்மேட்டுகளிலும் அசத்தி மீண்டும் டிராக்கைப் பிடித்திருக்கிறது இந்திய அணி.  
 

ஆனால், ரியல் ஃபைட் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில்தான் இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது இந்திய அணி. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே தன்னை சரிசெய்து கொள்ளவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது. வரும் அக் 12-ஆம் தேதி ஐதராபாத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதற்கான வேலைகளைத் தொடங்க வேண்டும். 
 

தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு சுற்றுப்பயணங்களிலுமே, இந்திய அணி சொதப்பியது பேட்டிங் லைன்-அப்பில்தான். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னர் அதிகம் விமர்சிக்கப்பட்ட விராட் கோலி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும்கூட வெற்றியின் எல்லைவரை சென்று யாரும் ஈடு கொடுக்காததால் தோல்வியைத் தழுவ வேண்டியிருந்தது. அதனால், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட நிபுணர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். 

 

 

அதன்படி, பிரித்வி ஷா, கே.எல்.ராகுலை ஓப்பனிங் இறக்கிவிட வேண்டும். இன் ஸ்விங் சமயங்களில் தடுமாறும் கே.எல்.ராகுல் அதைச் சரிசெய்து கொண்டால் சிறப்பு. இரண்டாவது பேட்ஸ்மேனாக சதீஸ்வர் புஜாராவுக்கு பதில் மாயன்க் அகர்வாலை இறக்கலாம். காரணம், டெஸ்ட் போட்டியில் அதீத அனுபவமிக்க புஜாராவை விட, அந்த இடத்தில் மாயன்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது எதிர்கால பலத்தை அதிகரிக்கும் என்பதுதான். மூன்றாவதாக விராட் கோலிக்கு ஓய்வளித்துவிட்டு அந்த இடத்தில் ரஹானேவை கேப்டன் பொறுப்புடன் களமிறக்கலாம். கேப்டனாக தான் களமிறங்கிய போட்டிகளில் ரஹானேவின் ஆட்டம் பொறுப்பானதாக அமைந்திருக்கிறது. அதேசமயம், அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பும் வாய்ப்பாகவும் அது இருக்கலாம். 
 

நான்காவது இடத்தில் பாண்டியாவுக்கு பதில் அனுமா விஹாரியை இறக்கவேண்டும். இங்கிலாந்து தொடரில் ஒரு ஆல்ரவுண்டராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட விஹாரிக்கு இந்த வாய்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பாண்டியாவைப் போல் அல்லாமல் பேட்டிங்கிலும் நிதானத்தைக் கடைபிடித்தவர் அவர். அவருக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் இறங்குவார். அவர் இயல்பாகவே அதிரடியாக ஆடுவதால், அவருக்கு அந்த இடம் நிரந்தரமானதாக இருக்கலாம். இந்த லிஸ்டில் ஆறு பேட்ஸ்மேன்கள் கட்டாயம் இருக்கவேண்டும். ஆஸ்திரேலிய தொடரில் ஒருவர் குறைந்தாலும் அது ஒட்டுமொத்த அணிக்கும் தடுமாற்றத்தையே தரும்.