டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி என மூன்று விதமான உலக கோப்பை போட்டிகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி. கேப்டன்ஷிப்பில் தனக்கென்று தனி பாணியை கொண்டவர். பல்வேறு சாதனைகளை கேப்டனாகவும் வீரராகவும் படைத்தவர். உலகின் சிறந்த பினிஷர் என்றும் அறியப்பட்டவர். அப்படிப்பட்ட தோனியின் பேட்டிங் அணுகுமுறை குறித்து, சமீப காலங்களாக விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
1994 முதல் 2000-ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் விக்கெட் கீப்பராக நயன் மோங்கியா இருந்தார். 140 ஒரு நாள் போட்டிகளிலும் 44 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதற்கு பிறகு 2004-ஆம் ஆண்டு வரை மன்னவா பிரசாத், சபா கரீம், விஜய் தாஹியா, சமீர் திஹே, தீப் தாஸ்குப்தா, அஜய் ரத்ரா, பார்த்தீவ் படேல், தினேஷ் கார்த்திக் என 8 விக்கெட் கீப்பர்கள் இந்திய அணியில் விளையாடியுள்ளனர். ஆனால் யாரும் பெரிய அளவில் விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் ஜொலிக்கவில்லை.
அந்த காலகட்டத்தில் பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்தவர் எம்.எஸ்.தோனி. பிறகு உலகின் சிறந்த விக்கெட் கீப்பர், மிக சிறந்த பினிஷர் மற்றும் பெஸ்ட் கேப்டனாக விளங்கினார். ஆனால் தற்போது பேட்டிங் பர்ஃபாம் குறித்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் தோனி. ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் ரிஷப் பண்ட் கிடைத்த வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்தி சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் தோனியின் இடம் குறித்து இரு தரப்பட்ட கருத்துகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் ஒரு நாள் போட்டிகளில் தோனியின் இடத்தை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் “வருடத்தின் ஒவ்வொரு நாளும் தோனி என்னுடைய அணியில் விளையாடுவார். 80 வயதானாலும், வீல்சேரில் வந்தாலும் என்னுடைய கனவு அணியில் தோனிக்கு இடமுண்டு. தோனி ஒரு சிறந்த வீரர். அவருடைய சாதனைகளை பார்த்தாலே தெரியும். அவரை போன்ற ஒரு வீரரை அணியில் இருந்து விலக சொல்கிறீர்களா? நீங்கள் வேண்டுமானால் அந்த மாதிரி சொல்லலாம். ஆனால் நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன்” என்றார்.
மேலும் விராட் கோலியை பற்றி கூறிய டி வில்லியர்ஸ் “கோலி கேப்டனாக சில வருடங்களாக தன்னுடைய தவறுகளில் இருந்து கற்று கொள்கிறார். நாங்கள் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்யும் போது எங்களுக்குள் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கிறது. விளையாட்டை பற்றி எங்களுக்குள் ஒரே விதமான எண்ணங்கள் உள்ளன. அதை நாங்கள் மகிழ்ச்சியாக கருதுகிறோம். அவருடன் இணைந்து பேட்டிங் செய்வது மிகவும் மகிழ்ச்சி. கோலிக்கு ரொனால்டோ ரொம்ப பிடிக்கும். அதனால் அவர் ரொனால்டோ; நான் மெஸ்ஸி” என்றார்.
பல புது வகையான ஷாட்களை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகபடுத்தி ரசிகர்களை தன் வசபடுத்தியவர் தென் ஆப்ரிக்காவின் டி வில்லியர்ஸ். ஸ்பைடர் மேன், மிஸ்டர்.360, சூப்பர் மேன் என பல புனை பெயர்களுக்கு சொந்தகாரர். அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களாலும் விரும்பப்படும் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் தான் டி வில்லியர்ஸ். இந்த வருடம் மே மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.