உலகக் கோப்பையின் 36 ஆவது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடிமைதானத்தில் இன்று (04-11-23) நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக மார்ன்ஸ் லபுஷேன் 83 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 71 ரன்களை குவித்தார். அதே போல், கீரின் 52 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடித்து 47 ரன்களும்,ஸ்டீவன் ஸ்மித் 44 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அதனை தொடர்ந்து, வார்னர், ஹெட் என அடுத்தடுத்த வீரர்கள் களமிறங்கிய குறைந்த ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இறுதியில், 49.3 ஓவர்களில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், மார்க் வுட் மற்றும் அடில் ராஷித் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி 287 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது. பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்ற அடுத்து வந்த ரூட்டும் 13 ரன்களில் வெளியேறினார். பின்னர் இணைந்த மாலன் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் நிதானமாக ஆடினர். அரைசதம் கடந்த மாலன் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 1 ரன்னில் வெளியேறினார். ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்து 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களில் மொயீன் அலி 42, வோக்ஸ் 32 ரன்கள் த்விர்த்து மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாம்பா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 3 ஆவது இடத்தில் நீடிக்கிறது.
இன்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், 4 ஆவது இடத்தைப் பெறும் அணி 12 புள்ளிகளே பெறும் என்பதால் அதிக ரன் விகிதம் வைத்துள்ள தென் ஆப்பிரிக்க அணி, இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 7 ஆட்டங்களில் தோற்றதால் தொடரிலிருந்து வெளியேறியது. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு 6 அணிகளிடையே போட்டி நிலவுகிறது. இலங்கையும், நெதர்லாந்தும் ரன் விகிதம் குறைவாக இருப்பதால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.