
கல்லூரி பிரியாவிடை விழாவில் பேசிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், பராண்டா பகுதியில் ஆர்.ஜி.ஷிண்டே கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், நேற்று முன் தினம் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரியில் படித்து வந்த வர்ஷா கரத் (20) என்ற மாணவி மேடையில் மகிழ்ச்சியோடு உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர், திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி வர்ஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக தான், வர்ஷா உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்ட தகவல்களின்படி, வர்ஷாவுக்கு 8 வயதாக இருந்தபோது இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும், கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை என்றும், எந்த மருந்துகளும் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியோரு உரையாற்றிக் கொண்டிருந்த மாணவி வர்ஷா, திடீரென்று மயங்கி உயிரிழந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.