
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சில்லறை விற்பனை விலையைக் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை சமாளிக்கும் விதமாக மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாயை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம் பெட்டோல் மற்றும் டீசல் மீதான விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கலால் வரி விகிதங்கள் இன்று உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி ரூ. 2 உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சகத்திடமிருந்து வெளியான ஒரு அறிவிப்பைப் பார்த்திருப்பீர்கள். இது தொடர்பாக நான் முன்கூட்டியே தெளிவுபடுத்துகிறேன். இதன் மூலம் நுகர்வோருக்கு விலையேற்றம் இருக்காது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 60 அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது. ஆனால் எங்கள் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் 45 நாட்களுக்குள் சரக்குகளை வைத்திருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 83 அமெரிக்க டாலராக இருந்தது. அதன் பின்னர் அது 75 அமெரிக்க டாலராக ஆகக் குறைந்தது. எனவே எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் எடுத்துச் செல்லும் கச்சா எண்ணெய் சரக்கு சராசரியாக ஒரு பீப்பாய்க்கு 75 அமெரிக்க டாலர் ஆகும். உலகளாவிய விலைக்கு ஏற்ப எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கட்டுப்படுத்தப்படும் என்று நியாயமாக எதிர்பார்க்கலாம். கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட துறையில், சந்தை சில்லறை விலையை அவர்கள் அதற்கேற்ப மாற்றியமைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் ரூ. 92 ரூபாய் 34 பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.