
இந்தியாவில் தற்போது கரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு கரோனா தடுப்பூசிகளைத் தனியார் நிறுவனங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி சற்று விலை உயர்த்தி மாநில அரசுகளிடம் விற்பனை செய்து வருகிறது. இதற்கு பல்வேறு மாநில முதல்வர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று காணொளி மூலம் மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் 21ம் தேதி முதல் அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா இது காலம் தாழ்ந்த நடவடிக்கை என்று விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், மாநிலங்களுக்கு வழங்குவதற்காக 25 கோடி கோவிஷீல்ட் மற்றும் 19 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு இன்று ஆர்டர் கொடுத்துள்ளது.