டெல்லியிலிருந்து ரஷ்யாவின் மாஸ்கோ சென்ற ஏர் இந்தியா சிறப்பு விமான பைலட்டிற்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் பாதி வழியில் விமானம் மீண்டும் டெல்லிக்குத் திருப்பப்பட்டது.
இன்று டெல்லியிலிருந்து ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு ஏர் இந்தியா விமானம் (AI-1945) புறப்பட்டுச் சென்றது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தின் பைலட்டிற்கு கரோனா சோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மத்திய ஆசியாவுக்கு மேலே பறந்துகொண்டிருந்த அந்த விமானம் மீண்டும் டெல்லிக்குத் திருப்பப்பட்டது. கரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் 'வந்தே பாரத் மிஷன்' திட்டத்தின் விமானமாகும் இது.
இந்தக் குறிப்பணியில் ஈடுபடும் விமானிகளுக்குப் பயணத்திற்கு முன்னரே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம், அப்படிச் செய்யப்பட்ட பரிசோதனையில் விமானியின் முடிவு தவறாக நெகடிவ் எனக் கருதப்பட்டதால் அவர் விமானத்தை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் விமானம் கிளம்பிய பிறகு தவறை உணர்ந்த அதிகாரிகள், விமானிக்கு கரோனா இருப்பதைக் கண்டறிந்து பாதி வழியில் விமானத்தைத் தொடர்புகொண்டு டெல்லிக்குத் திரும்ப உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த விமானம் மாஸ்கோ பயணத்தை ரத்து செய்து மீண்டும் டெல்லி திரும்பியது.