
12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை, 23 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த மாணவி கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
தடகளப் போட்டியில் பயிற்சி பெற்று வந்த பாதிக்கப்பட்ட மாணவியை, அவரது நண்பர் கடந்த மார்ச் 29ஆம் தேதி புஷாச்மோச்சன் பகுதியில் உள்ள பாருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த மாணவிக்கு தெரிந்த சில ஆண் நண்பர்களும் அங்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும், குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொடுத்துள்ளனர். இதில் மயக்கமடைந்த மாணவியை, சிக்ரா பகுதியில் உள்ள பல்வேறு ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று ஏப்ரல் 4ஆம் தேதி வரை 23 பேர் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மாணவியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாரில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தியும், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் வருகின்றனர். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 11 பேர் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.