Skip to main content

பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சியில் ஈடுபட அனுமதி ரத்து! அதிரடி முடிவெடுத்த நியூசிலாந்து!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

Pakistan cricket team

 

 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 இருபது ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி அடுத்த மாதம் 18 -ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெற இருக்கிறது. நியூசிலாந்தில் கரோனா பாதுகாப்பு வளையத்தினுள் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் வீரர்களில் 6 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் கரோனா பாதுகாப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

 

இதைனையடுத்து, 'தொடர்ந்து இது போன்ற விதி மீறலில் ஈடுபட்டால் தொடர் ரத்து செய்யப்படும்' என பாகிஸ்தான் அணியினருக்கு இறுதி எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. நியூசிலாந்து சுகாதாரத்துறையின் இந்தக் கருத்துக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

 

இந்நிலையில், மேலும் ஒரு பாகிஸ்தான் வீரருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

பாகிஸ்தான் குழுவில் உள்ள 53 பேருக்கும் வரும் திங்கள் கிழமை மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. தனிமைப்படுத்தல் காலத்தில் இருந்தபோதும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அதற்கான அனுமதியை நியூசிலாந்து அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.