Skip to main content

மீண்டும் இறுதிப்போட்டி! சென்னைக்கு இருக்கும் வாய்ப்புகள்? - ஐ.பி.எல். தகுதிச்சுற்று #1

Published on 22/05/2018 | Edited on 22/05/2018

ஒருவழியாக ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் 11ஆவது சீசன் நிறைவை எட்டியிருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கும் நான்கு அணிகளில், முதல் இரண்டு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று முதல் தகுதிச் சுற்றில் மோதுகின்றன. 
 

csk

 

 

இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றில் களமிறங்கிய 14 போட்டிகளில் தலா 9 வெற்றிகளைப் பெற்று, 18 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலிடத்தைப் பிடித்திருந்தது. நடப்பு சீசனில் மிகச்சிறப்பாக ஆடிவந்த இந்த இரண்டு அணிகளும், லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. 
 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடைசியாக களமிறங்கிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்தத் தொடரின் ஆகச்சிறந்த பவுலிங் டீம் என புகழப்பட்ட இந்த அணி களமிறங்கிய கடைசி நான்கு போட்டிகளில் எதிரணிகள் 187, 180, 218 மற்றும் 173 ரன்களை விளாசியிருக்கின்றன. இந்த சீசனின் மிகச்சிறந்த எக்கானமி ரேட்டான 7.24 ரன்களைக் கொண்டிருக்கும் இந்த அணி, கடைசி நான்கு போட்டிகளில் எக்கானமி ரேட்டை 9.64 என அதிகரித்திருக்கிறது. 
 

srh

 

 

அதேபோல், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதியில் இருந்து ஒரு வெற்றி, ஒரு தோல்வி என மாறிமாறி போட்டி முடிவுகளைக் கண்டிருக்கிறது சென்னை அணி. ஒருவேளை இதே ட்ரெண்ட் தொடருமானால், இன்றைய போட்டி தோல்வியை பரிசாக அளிக்கலாம். முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகளுக்கு தோல்வி இன்னொரு வாய்ப்பை அளித்தாலும், இறுதிப்போட்டிக்குள் சுலபமாக நுழையவே எந்த அணியும் விரும்பும்.
 

கடைசி மூன்று தோல்விகள், சென்னை உடனான இரண்டு தோல்விகள், எக்கானமி ரேட்டில் வீழ்ச்சி என சகலவிதமான பிரச்சனைகளும் சன்ரைசர்ஸ் அணிக்கே இருக்கிறது. சென்னை அணியுடன் மோதிய 8 போட்டிகளில் அந்த அணி இரண்டு முறை மட்டுமே வென்றிருக்கிறது. இதே வேகத்தில் இன்றைய போட்டியிலும் வென்று ஏழாவது முறையாக ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்குள் நுழையும் அணி என்ற பெருமையை சென்னை அணி பெறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.