எட்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அம்பத்தி ராயுடு, இந்த ஆண்டு ஐ.பி.எல். சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.2.2 கோடிக்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டார். சென்னை அணிக்காக அவர் களமிறங்கிய முதல் சீசனே மிகச்சிறப்பாக அமைந்தது.
சென்னை அணியின் ஓப்பனராகவும், நான்காவது வீரராகவும் போட்டிக்கு ஏற்றாற்போல் களமிறங்கிய ராயுடு, தனது முதல் ஐ.பி.எல். மற்றும் டி20 சதத்தினை பதிவுசெய்தார். மேலும், இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்ற ராயுடு, 16 போட்டிகளில் 602 ரன்கள் விளாசியிருந்தார். அவரது சராசரி 43 ரன்கள். 32 வயதாகும் ராயுடு தனது வெற்றிகரமான ஐ.பி.எல். சீசனை விளையாடி இருக்கிறார்.
இந்நிலையில், நடந்துமுடிந்த ஐ.பி.எல். சீசன் குறித்து ஹர்பஜன் சிங் நடத்தும் ‘குயிக் ஹீல் பாஜி ப்ளாஸ்ட் ஷோ’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராயுடு, ‘ஒவ்வொரு ஐ.பி.எல். சீசனின் போதும் விராட் கோலியிடம் இருந்து ஒரு பேட்டை கடனாக வாங்குவேன். இந்த சீசனில் அது மிகச்சிறப்பாகவே எனக்கு ஒத்துழைத்திருக்கிறது. என்னுடைய லக்கி சார்ம் விராட் தந்த பேட்தான்’ என கூறியிருக்கிறார்.
நடந்துமுடிந்த சீசனில் 53 பவுண்டரிகள், 34 சிக்ஸர்கள் விளாசிய ராயுடு, அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.