இந்தியா தலைமையேற்று நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, அடுத்த மாதம் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளன.
உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று மொகாலியில் தொடங்கியது. இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு முதல் இரு போட்டிகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், முதல் இரு ஆட்டங்களை கே.எல். ராகுல் இந்திய அணியைத் தலைமை ஏற்று நடத்துகிறார்.
இந்த முதல் நாள் தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களம் இறங்கியது. 35 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டை இழந்து 166 எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நின்றது. இதனையடுத்து, மைதானத்தில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதன் பின்னர் 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணி களம் இறங்கியுள்ளது. இதில் இந்திய அணியைச் சேர்ந்த ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணிக்காக முதலில் பேட்டிங் செய்து வருகின்றனர். தற்போது உள்ள நிலையின்படி, இந்திய அணி எந்தவித விக்கெட் இழப்பில்லாமல் 6 ஓவருக்கு 41 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு விளையாடி வருகின்றது.