மருத்துவ நிபுணர்களை சந்திக்கும் முன் குடும்ப நல மருத்துவர்களை ஏன் அணுக வேண்டும் என்று டாக்டர் அருணாச்சலம் விளக்கம் அளிக்கிறார்.
பொதுவாக தங்களுக்குத் தெரிந்த நல்ல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அந்த மருத்துவர் பரிந்துரைக்கும் நிபுணரை அணுகுவதைப் பல குடும்பங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன. நாங்களும் அந்தக் குடும்பத்துக்கு ஏற்ற நிபுணரைப் பரிந்துரைப்போம். இது எங்களுக்குள் இருக்கும் ஒரு நெட்வொர்க். நோயாளியுடைய உள்ளுணர்வையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது நாங்கள் படிக்கும்போது சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். மருத்துவம் குறித்த விவரம் அறியாத மக்கள் நவீன மருத்துவத்தை அணுகுவதில் சிக்கல் இருக்கிறது.
அதிகமான மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மருத்துவரிடம் சரணடைந்து, சந்தேகங்களை விடுத்து மருத்துவம் பெற்றுக் கொள்வதே சரியாக இருக்கும். ஒருவருக்குத் தலைவலி ஏற்பட்டால் நிபுணரை அணுக வேண்டும் என்பதற்காக நரம்பு நிபுணர், கண் நிபுணர், மூக்கு நிபுணர் என்று அனைவரையும் அணுகிவிட்டு இறுதியில் குடும்ப நல மருத்துவர்களிடம் வருபவர்களும் இருக்கின்றனர். இது தவறு.
நேரத்திற்கு உண்ணாமை, குறைவாகத் தண்ணீர் குடிப்பது, தூக்கமின்மை, அதிக நேரம் டிவி, மொபைல் பார்ப்பது, கோபம் போன்ற உணர்வுகள் ஆகியவற்றால் தலைவலி ஏற்படலாம். எனவே நீங்கள் நம்பும் குடும்ப நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவிட்டு அதன் பிறகு வல்லுநரை அணுகுவது சரியான நடைமுறையாக இருக்கும்.