தினந்தோறும் பல்வேறு விதமான வித்தியாசமான மனநிலை பிரச்சனைகளோடு வருகிறவர்களை தாங்கள் கையாண்ட விதம் குறித்தும் அது குறித்த விழிப்புணர்வையும் தொடர்ச்சியாக நம்மிடம் டாக்டர் பூர்ண சந்திரிகா பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணைப் பற்றி நம்மிடம் விவரித்தார்.
ஒரு பெண்ணும் அவருடைய தாயும் என்னிடம் வந்தனர். என்னுடைய பெண்ணைக் காப்பாற்றுங்கள் என்று கூறி என் காலில் விழுந்து அந்த தாய் அழுதார். அவருடைய பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 20 வயதுடைய அந்தப் பெண் நன்றாகப் படிக்கக் கூடியவர். வெளிநாடு செல்லவிருந்தார். அவருடைய அப்பாவும் வெளிநாட்டில் இருந்தார். அந்தப் பெண்ணிடம் தனியாகப் பேசினேன். இந்தப் பெண் லேப்டாப்பில் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதை அவருடைய தாய் பின்னால் இருந்து பார்த்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
தன்னுடைய ஆண் நண்பருடன் அந்த பெண்ணுக்கு தொடர்ச்சியான உடலுறவு இருந்திருக்கிறது. அவருடைய சம்மதத்துடன் தான் அது நிகழ்ந்திருக்கிறது. இது குறித்த மெசேஜ் அனைத்தையும் படித்த அவருடைய தாய் மிகவும் கோபப்பட்டார். மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணிடம் அதை சொல்லிக்காட்டிக் கொண்டு இருந்திருக்கிறார் தாய். இனி அந்தப் பெண் வாழத் தகுதியற்றவள் என்று கூறி அவளை சாகச் சொல்லியிருக்கிறார். இந்தப் பெண்ணும் அதனால் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்.
அதன் பிறகு தான் அவர்கள் நம்மிடம் வந்துள்ளனர். இது போன்ற பிரச்சனைகள் இன்று பல வீடுகளில் இருக்கின்றன. எதையும் தன்மையாக எடுத்துக் கூறாமல் பெற்றோர் மிகக் கடுமையாக நடந்துகொள்கின்றனர். தன் தாய் கூறிய வார்த்தைகள் அந்தப் பெண்ணின் மனதில் எப்போதும் வடுவாக இருக்கும். வார்த்தைகளில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவு கோபம் இருந்தாலும் வார்த்தைகளாலோ, செயல்களாலோ தங்களுடைய பிள்ளைகளைக் காயப்படுத்தக் கூடாது. அந்த தாய்க்கும் சேர்த்து மனநல சிகிச்சை வழங்கி அந்த பெண்ணுக்கான வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள ஆலோசனை வழங்கினோம்..