நமது மனநலம் குறித்த பல்வேறு விஷயங்களை நம்மோடு மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா பகிர்ந்து கொள்கிறார்.
எண்ண சுழற்சி வியாதி பலருக்கும் இருக்கிறது. சிலர் ஒவ்வொரு வேலையைச் செய்வதற்கும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வார்கள். சிறிய வேலைக்கும் கூட அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். மிகவும் மெதுவாகவே இயங்குவார்கள். தவறு நடந்துவிடுமோ என்கிற அச்சத்தில் எடுத்துக்கொள்ளும் நேரம் தான் இது. சிலருக்கு பல்வேறு தவறான நம்பிக்கைகளின் மூலம் இந்த நோய் ஏற்படும். மற்றவர்களின் பார்வைக்கு அவர்கள் வித்தியாசமாகத் தெரிந்தாலும் அவர்களால் தங்களை மாற்றிக்கொள்ள முடியாது.
இப்படியான பிரச்சனையோடு ஒருவர் நம்மிடம் வந்தார். தன்னுடைய அலுவலகத்திலும் வீட்டிலும் தான் செய்யும் வேலைகள் மிகவும் தாமதமாவதாக அவர் கூறினார். நம்மிலேயே பலருக்கு வீட்டின் பூட்டை திரும்பத் திரும்ப ஆட்டிப் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. சிலர் குளிக்கும்போது நீண்ட நேரம் குளித்துக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் சிலர் வீட்டை சுத்தம் செய்யும்போது நீண்ட நேரத்திற்கு சுத்தம் செய்வார்கள். சிலருக்கு இந்த சுபாவம் குறைந்த அளவில் இருக்கும். சிலருக்கு இது ஒரு வியாதியாகவே மாறிவிடும். அதனால் அவர்களுக்கு வேலை பாதிக்கப்படும், தூக்கம் வராது.
சிறுவயதில் ஏற்படும் அதிர்ச்சியான விஷயங்கள், மூளை பாதிப்புகள் போன்ற பல்வேறு காரணங்களினால் இந்த நோய் ஏற்படலாம். ஒரு வேலையை அதிக நேரம் செய்யாமல் இருந்தாலும் பதற்றமில்லாமல் இருக்க முடியும் என்பதை அவர்கள் நம்பும் வகையில் நாங்கள் சிகிச்சைகள் தருவோம். சிபிடி சிகிச்சையையும் நாங்கள் பயன்படுத்துவோம். இதன் மூலம் இந்த நோயிலிருந்து அவர்கள் விடுபட முடியும்.