உலகத்தையே சுருக்கி ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர்களுக்குள் வைத்துவிட்டோம். நமக்கு மட்டும் தெரிந்த அந்த உலகிற்குள் ஆயிரம் ரகசியங்கள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப் பாதுகாக்க யாராலும் கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அது யாராலும் கண்டுபிடிக்கப்படாது என்று நம்மால் உத்தரவாதமாக சொல்லமுடியுமா? உங்கள் உடல் வெப்பமே அதைக் காட்டிக் கொடுத்துவிடும் என்கிறது அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்று.
ஆம்.. உலகிலேயே மிகக்கடினமான, எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத இந்த பாஸ்வேர்டுகளைக் கண்டுபிடிக்க, ஹேக்கர்கள் புதிய முறையைக் கையாள்கிறார்களாம். தெர்மல் இமேஜிங் முறைப்படி ஒருவர் தான் பயன்படுத்தும் சாதனத்தின் பாஸ்வேர்டை சில வழிமுறைகள் மூலம் கண்டுபிடிக்கிறார்களாம். இதற்கு ‘தெர்மனேட்டர்’ (Thermanator) என்ற பெயரும் வைத்திருக்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொள்ளும் அறிவியலாளர்கள்.
கலிஃபோர்னியாவில் உள்ள இர்வின் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நான்கு விதமான கீபோர்டுகளை 31 வெவ்வேறு நபர்கள் பயன்படுத்துகிறார்கள். அந்த கீபோர்டுகள் மிகத்தெளிவாக தெரியும் வண்ணம் ஒரு தெர்மல் கேமரா முன்கூட்டியே பொருத்தப்பட்டுள்ளது. இந்த 31 பேரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை எண்டர் செய்த பின்னர், தொழில்நுட்ப அறிவு இல்லாத நான்கு பேர் தெர்மல் இமேஜிங் மூலம் அந்த பாஸ்வேர்டுகளை சரியாக கண்டுபிடிக்கின்றனர். தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்களே கண்டுபிடித்தால், விவரம் தெரிந்த ஆட்களைப் பற்றி சொல்லவேண்டுமா என்ன?
தகவல் திருட்டைத் தடுக்க புதிய முறைகளைக் கையாளவேண்டும் என இந்த ஆய்வு முடிவு வலியுறுத்தியிருக்கிறது.