வாழ்க்கை என்பதொரு பெரும் பயணம். அந்தப் பயணத்தை, பாதுகாப்பாயும்; தனக்கும் சமூகத்துக்கும் பயனுள்ளதாயும் அமைத்தல் என்பது நம் அனைவரின் விருப்பம். இந்தப் பயணமெனும் வழியெல்லாம் வலியில்லாத பெருவாழ்வு வாழ்தல் அனைவரின் உரிமை. அவ்வுரிமையைப் பெற சில கடமைகள் செய்ய வேண்டும். அத்தகு கடமைகளுள் ஒன்று உடற்பயிற்சி. அதிலும் குறிப்பாய் நடைப்பயிற்சி.
இன்று வயது முதிர்ந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளோர் உடல் எடை அதிகம் உள்ளோர் உட்பட அனைவருக்கும் மருத்துவர்களால் நடைப்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. முதலில் நடைப்பயிற்சியின் அடிப்படையை அறிந்து கொள்வோம். உடலில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க, உடல் எடையைக் குறைக்க மற்றும் பிற உடல் உபாதைகளைக் குறைக்க நடைப்பயிற்சி மேற்கொள்வோர், குறைந்தது 45 நிமிடங்களுக்கு அதிகமாக நடந்தால் மட்டுமே முழுப்பயனை அடைய முடியும். முதல் 45 நிமிடம் வரை, நடைப்பயிற்சிக்கு முந்தைய வேளையில் நாம் எடுத்துக்கொண்ட உணவில் இருந்த குளுக்கோஸ் கரைவதற்கு மட்டுமே போதுமானதாக அமையும். 45 நிமிடங்களுக்குப் பிந்தைய நடையே, நமது இடுப்பு, தொடை, வயிறு, கை, கால்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது.
ஆனால், அவ்வளவு நேரம் நடப்பதென்பது, பல நேரங்களில் நடைமுறையில் சாத்தியமில்லாக் காரியம். காரணம் நமது மூட்டுகளில் ஏற்படும் வலி.
இந்த வலியோடு தொடர்ந்து நடப்பது, மூட்டுகளின் உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் சாதாரணமாக நடப்பதில் கூட சிக்கல் வரலாம். எனவே, நடைப்பயிற்சி மேற்கொள்வோர் அனைவரும் Resisted Exercise என்று சொல்லக்கூடிய எடை தூக்கும் பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மூட்டுகளை சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தினால் மட்டுமே, நாம் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ள உகந்த சூழல் உருவாகும். அதற்காகவே இந்த எடை தூக்கும் பயிற்சி. வயது முதிர்ந்தோரும் கூடுமானவரை அவசியமாய் எடை தூக்கல் பயிற்சியில் ஈடுபட வேண்டும். தசையின் வலு என்பது மூட்டுகளை மட்டும் காப்பாற்றுவதற்கு அல்ல.
நாம் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அப்படி எடுத்துச் செல்லப்பட்ட உணவு முறையாக பயன்படுத்தப்பட, இந்த நடைப்பயிற்சியும் எடை தூக்கும் பயிற்சியும் அதி முக்கியமாகும்.
எடுத்துக்காட்டாக, கால்சியம் சத்து; எலும்புகள், தசை, தசை நார்கள் என்று அனைத்துப் பகுதிகளுக்கும் தேவையான ஒன்று. நாம் கால்சியம் நிறைந்த உணவை உட்கொண்டாலோ அல்லது கால்சிய மாத்திரைகளை உட்கொண்டாலோ அவை வயிற்றுக்குள் செல்கின்றன. அங்கிருந்து கால்சியசத்தை குடல் உட்கிரகித்து, தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அனுப்பவேண்டும். இந்தப் பரிமாற்றம் நிகழ நடைப்பயிற்சியும், சூரிய ஒளியும் அவசியமாகின்றன.
இதுபோலவே இன்னபிற சத்துக்களும் தேவையான உறுப்புகளைச் சரியாகச் சென்றடைய நடைப்பயிற்சி அவசியமாகிறது.
மேலும் உடல் எடையைக் கூட்ட மற்றும் உடல் நல்ல வடிவம் பெற என தசையை வலுவூட்டும் பயிற்சிகள் எல்லாம், இளையவர்களுக்கு மட்டுமானவை என்ற தவறான சிந்தனையை நம் பொதுப்புத்தியிலிருந்து நீக்கி; எடை சார்ந்த பயிற்சிகளை அனைவரையும் பின்பற்ற வைப்பது முக்கியம். தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளோடு கூடிய நடைப்பயிற்சியே முழுமையான பயன் தரும். தசையை வலுப்படுத்தும் பயிற்சியில்லாத நடைப்பயிற்சி, மூட்டு வலியில் நம்மை முடங்கச் செய்துவிடும். நம் உடலுக்கு ஏற்ற தசைவலு பயிற்சியின் அளவு, நடைப்பயிற்சியின் அளவு, பயிற்சிகளின் போது அணியப்பட வேண்டிய காலணிகளின் தன்மை ஆகியவற்றை அறிய அருகில் உள்ள இயன்முறை மருத்துவமனைகளை அணுகி இயன்முறை மருத்துவர்களின் முறையான ஆலோசனைகளை பெற்றுப் பயனடைய வேண்டும். "பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்" என்பது பழமொழி. "நடக்கத் தெரிந்தால் நன்மை கூடும்" என்பது புதுமொழி.
டாக்டர். சு. டேனியல் ராஜசுந்தரம்
தலைமை இயன்முறை மருத்துவர்
மயோபதி ஆராய்ச்சி மையம்
ஜீவன் அறக்கட்டளை