உணவுப் பொருட்கள் கெட்டு போகாமல் நீண்ட நாட்கள் வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்களில் முதன்மையானது ஃபிரிட்ஜ் என்று அழைக்கப்படும் குளிர் சாதனப்பெட்டி. தற்போது குளிர் சாதனப்பெட்டி இல்லாத வீடுகளே இல்லை என்கிற அளவுக்கு அதன்பாடு அதிகரித்துள்ளது. காய்கறிகள், பழங்கள் என்று எளிதில் வீணாகும் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் போது அது அவ்வளவு சீக்கரம் கெட்டுபோகாமல் பாதுகாக்கிறது. ஆனால், தற்போது சமைத்த உணவுப்பொருட்கள், இறைச்சி முதலிய பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் நீண்ட நாட்கள் வைத்திருப்பது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவே இருக்கின்றது.
அதன்படி இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது அதில் அதிக அளவு பாக்டீரியா உருவாகி விடும். எனவே அதனை சரிவர சமைக்காமல் சாப்பிட்டால் அது இரைப்பையை பாதித்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. இது இரைப்பையை மட்டும் தாக்காமல் அதன் பாதிப்பு சிறுகுடல், சிறுநீரகம் வரை செல்கின்றது. மாதக்கணக்கில் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் அதில் உள்ள புரதச் சத்துக்கள் குறைந்துவிடுவதோடு, அதன் தூய்மை தன்மையும் கெட்டு அது உணவாக இல்லாமல் விஷமாக மாறிவிடுகின்றது. பெரும்பாலும் ஓட்டல்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்த உணவையே அதிகம் பயன்படுத்துவதால் நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். எனவே வெளிஇடங்களில் சாப்பிடுவதை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும் அல்லது நிறுத்திவிட வேண்டும். சமைத்த உணவு பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சூடு செய்து சாப்பிடும் பழக்கத்தையும் முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.