நம்முடைய அணைத்து தேவைகளுக்கும் பணம் ஒரு இன்றியமையாத ஒன்றாக உள்ளது .அந்த பணம் இருந்தால் வாழ்வில் எளிதாக எல்லாவற்றயும் பெற்று விட முடியுமா? செல்வச் செழிப்பில் இருப்பவர்களுக்கு ஒரு இறுமாப்பு இருக்கும். பணத்தை விட்டெறிந்தால் எதனையும் சாதித்துவிடலாம் என்ற அகங்காரம் அவர்களிடம் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும். ஒருமுறை இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் லண்டன் பிபிசியில் உரை நிகழ்த்த இருந்தார். அப்போது தொலைக் காட்சி சேவை கிடையாது என்பதால் வானொலிக்கு மதிப்பும் மரியாதையும் மிக அதிகம்.எனவே சர்ச்சில் உரை நிகழ்த்த இருப்பதைப் பற்றி நிறைய விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதனால் அந்நாட்டு மக்கள் அவரது உரையைக் கேட்பதற்காக மிகுந்த ஆவலுடன் இருந்தனர்.இந்நிலையில் அலுவலகத்தில் வேலையில் மூழ்கிப் போயிருந்த சர்ச்சில் திடீரென்று கடிகாரத்தைப் பார்த்தபோது அதிர்ந்து போனார்.அவர் உரை நிகழ்த்த இன்னும் இருபது நிமிடங்கள் மட்டுமே இருந்தன.
அதற்குள் பிபிசி வானொலி நிலையத்தை அடைய வேண்டும்.உதவியாளரை அழைத்து வானொலி நிலையத்திற்குச் செல்ல வேகமாக ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டார். அவரும் வேகமாக வெளியே வந்தபோது மின்தடை ஏற்பட்டு எங்கும் கும்மிருட்டு நிலவியது.இருட்டில் தடவி காரை ஸ்டார்ட் செய்து புறப்படுவது எல்லாம் ஆகாத காரியம் என்று நினைத்த சர்ச்சில் அந்த நேரத்தில் சரியாக அங்கே வந்து கொண்டிருந்த டாக்ஸியை நிறுத்துமாறு கூறினார்.அப்படியே உதவியாளரும் டாக்ஸியைக் கைகாட்டி நிறுத்தி, ‘‘ரொம்ப அவசரம். சவாரி வருமா?’’ என்று கேட்டார்.அதற்கு டாக்ஸி ஓட்டுநரோ, ‘‘எனக்கும் ரொம்ப அவசரம். இன்னும் சற்று நேரத்தில் சர்ச்சில் வானொலியில் உரையாற்ற இருக்கிறார். அதைக் கேட்டே ஆக வேண்டும். ஸாரி, வரமுடியாது’’ என்றார்.பதறிப்போன உதவியாளர் உடனே தன் பாக்கெட்டில் கையை நுழைத்து சில பவுண்டுகளை எடுத்து ஓட்டுநரிடம் நீட்டினார். அதைப் பார்த்த ஓட்டுநரின் கண்கள் அகலவிரிந்தது. ‘‘சர்ச்சில் கிடக்கிறார். நீங்க ஏறுங்க சார்’’ என்றார்.நம் ஊரில் மட்டுமல்ல, நாம் ரொம்பவும் மரியாதைக்குரியவர் களாக நினைக்கும் மேலைநாட்டிலும் பணம் பத்தும் செய்கிறது.
பணம் என்பது வாழ்க்கைக்குத் தேவை அவ்வளவுதான். வாழ்க்கையே பணம் கிடையாது.வாழ்க்கையில் முன்னேறுவது என்பதில் பணமும் ஒன்று. இந்த எளிய தத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த சமுதாயத்தில் நல்ல பெயரைச் சம்பாதிக்க வேண்டும். உங்களை வாழ்த்துகிறவர்கள் குறைவாக இருந்தாலும், திட்டுகிறவர்கள் அதிகமாக இருக்கக்கூடாது.பண வசதியுடன் மட்டுமல்லாமல் மன வசதியுடனும் வாழ வேண்டும்.பணத்தால் எதையும் செய்யலாம் என்று நினைத்தால் அதில் நிச்சயமாகத் தோற்றுப் போய்விடுவோம்.ஒரு செல்வந்தர் இறந்து போனார். பணவசதியோடு செல்வம் செழித்தோங்க, பலரும் அவருக்குத் தலைவணங்கி வாழ்ந்தவர் என்பதால் அந்தச் செருக்கோடு சொர்க்கத்திற்குச் சென்றார்.
அங்கே வாசலில் நின்றிருந்த காவலாளி அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தான்.‘‘நான் மிகவும் நல்லவன். நிறைய பேருக்கு உபகாரங்கள் செய்திருக்கிறேன்’’ என்றார் அந்த செல்வந்தர்.‘‘நீ சொல்வதை உண்மையென்று நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’’ என்று கேட்டான் காவலாளி.‘‘நான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு பசியால் வாடிய ஒருவருக்கு இருபது ரூபாய் கொடுத்து உதவி செய்திருக்கிறேன். அப்புறம் நேற்று வீடுகூட இல்லாமல் பிளாட்ஃபாரத்தில் இருந்த ஒருவருக்கு பத்து ரூபாய் கொடுத்தேன். இன்று இறந்து போவதற்கு முன்பாக பிச்சைக்காரன் ஒருவனுக்கு ஐந்து ருபாய் தர்மம் அளித்தேன்’’ என்று தனது தான தர்மங்களைப் பிரமாதப்படுத்தினார்.இவற்றைக் கேட்ட காவலாளி, கடவுளிடம் அனுமதி கேட்டுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு உள்ளே சென்றான்.சற்று நேரத்தில் திரும்பி வந்த அவன் நாற்பது ரூபாயை செல்வந்தரிடம் கொடுத்தான். நீங்கள் கொடுத்த முப்பத்தைந்து ரூபாயுடன் ஐந்து ரூபாயும் சேர்த்துக் கடவுள் உங்களிடம் திருப்பித் தரச் சொன்னார். இப்போது நீங்கள் நரகத்திற்குச் செல்லலாம்’’ என்றான்.பணத்தால் எல்லாவற்றையும் எப்போதும் விலைக்கு வாங்கிவிட முடியாது. அது நிரந்தரமான முன்னேற்றமாகவும் இருக்காது.