தேங்காய் சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்களை நமக்கு வழங்குகிறார் டாக்டர் சுகந்தன்.
தென்னம்பிள்ளை வளர்ப்பது வீட்டில் ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கு சமம் என்று சொல்வார்கள். தாய்ப்பாலுக்கு நிகரான ஒரு விஷயம் தான் தேங்காய்ப்பால். அல்சர் சம்பந்தமான விஷயங்களுக்கு எளிமையான ஒரு உணவுமுறை மருந்து தான் தேங்காய். இன்று குழந்தைகளுக்கு நல்ல கொழுப்புச்சத்து கிடைக்காமல் போகிறது. உணவில் தேங்காய் பயன்படுத்துவது இன்று குறைந்துகொண்டே வருவது தான் அதற்கான காரணம். முடி உதிர்தல் பிரச்சனை இன்று பலருக்கு இருக்கிறது. தேங்காய் எண்ணெய் வைப்பதை நாம் நிறுத்தியது தான் இதற்கான காரணம்.
தேங்காய்க்குள் பல்வேறு ஆற்றல்கள் இருக்கின்றன. தேங்காய் என்பது எளிதில் கெட்டுப்போகக் கூடிய ஒன்றல்ல. தேங்காய் சாப்பிடுவதால் புற்றுநோயைத் தவிர்க்கக்கூடிய ஆற்றல் நமக்கு கிடைக்கும். கீமோதெரபி, ரேடியோதெரபி கொடுக்கக்கூடிய ஆற்றல்கள் தேங்காயில் இருக்கின்றன. கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் தேங்காய் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளலாம். வாய்ப்புண்ணை ஆற்றக்கூடிய சக்தி தேங்காய்க்கு உண்டு. தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி வாய் கொப்பளிக்கலாம்.
இதன் மூலம் வாய் துர்நாற்றம் சரியாகிவிடும். தொண்டையில் இருக்கும் சளி எளிதாக வெளியே வரும். ஒல்லியாக இருக்கும் குழந்தைகளுக்கு தேங்காய் கொடுக்கும்போது அவர்கள் வலுப்பெறுவார்கள். ஒரு காலத்தில் தாய்ப்பாலுக்கு நிகராக தேங்காய்ப்பாலையும் கொடுத்து வந்தார்கள். இப்போது அது குறைந்துவிட்டது. இளநீரை வெறும் வயிற்றில் குடிக்காமல், உணவு உண்ட பிறகு குடிப்பது நல்லது. பித்தப்பை மற்றும் சிறுநீரக கல் இருப்பவர்கள் இளநீர் குடிக்கலாம். ஒரு காலத்தில் இளநீர் என்பது குளுக்கோசாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது.
இளநீர் குடித்தவுடன் நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். இது உடலுக்கு திடமான ஆரோக்கியத்தை அளிக்கிறது. தேங்காய் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதன் மூலம் பல்வேறு நோய்களை நம்மால் வென்று காட்ட முடியும். நமக்கு அருகிலே இருக்கும் கேரள மக்கள் தொடர்ந்து தேங்காயைப் பயன்படுத்தி வருகின்றனர். அதனுடைய மகத்துவம் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது. நமக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தையும் வழங்கும் தேங்காயை நாம் தினமும் பயன்படுத்த வேண்டும்.