திராவிடத் தந்தையாகிய ஈ.வே.ராமசாமி பெரியார் பேசுவதை எத்தனை நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். மேடைப் பேச்சைவிட தனியாக சம்பாஷித்துக் கொண்டு இருக்கும்போது அதிகச் சுவை தட்டும்.
அவர் ஒருதடவை விருதுநகரிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்து கொண் டிருந்தார். அவருடைய தோழர் ஒருவர் அதே ரயிலில் இரண்டாம் வகுப்பில் (இப்போது அது முதல் வகுப்பு) சென்னைக்குப் போய்க்கொண்டிருந்தார். இரண்டாவது வகுப்பில் இருந்த அவர் தூங்கும்முன் பெரியாருடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்க விரும்பினார். ஆகையால் அவர் பிரயாணமும் கொஞ்ச தூரம் மூன்றாவது வகுப்பில் தொடர்ந்தது.
மதுரையில் ஒரு பிராமண வக்கீல் அந்த வண்டியில் ஏறினார். அது எப்படி ஏற்பட்டது என்று பெரியார் கவனிக்கவில்லை, ஆனால் வெகு சீக்கிரத்திலேயே தம் தோழரும் வக்கீலும் பெரிய வாக்குவாதத்தில் இறங்கியிருப்பதைக் கண்டார். பலமான சத்தம் வேறு. இருவருமே ஒரே சமயத்தில் கடுமையான வசை புராணத்தில் இறங்கி விட்டார்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள கீழ்த்தரமான வார்த்தைகள் சரவெடியாய் முழங்கின. சில நிமிஷங்கள் வரை வண்டியிலுள்ள மற்ற பிரயாணிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு இந்த சொல் சண்டையை கவனித்துக் கொண்டு இருந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் பேச்சு சண்டையின் வேகம் குறைந்தது. இருவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள். இந்த இடைப் பட்ட நேரத்தில் பெரியார் தம் தோழரைக் கண்டித்தார், "அவர் என்ன சொல்கிறார் என்பதைக்கூட தெரிந்து கொள்ளாமல் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே நீங்களும் பேசுவதில் என்ன பயன்'' என்று கேட்டார்.
தமக்கு ஆதரவாக ஒரு பெரியவர் கிடைத்ததை நினைத்து பிராமண வக்கீல் சந்தோஷப்பட்டார். “"அவர், ராமசாமி நாயக்கன் ஆளு சார்! அவருடன் பேச்சுக் கொடுத்தாலே இப்படித் தான்!'' என்றார்.
“அதுதானே நானும் சொல்லுகிறேன்? அதுதெரியாமல் நன்றாகப் படித்த நீங்கள்கூட இப்படி வீண் வாதத்தில் இறங்கி விட்டீர்களே!'' என்றார் பெரியவர். வக்கீலுடன் அன்பாக பேச ஆரம்பித்தார்.
திண்டுக்கல் வந்தது. தோழர் பெரியாரிடம் விடைப் பெற்றுக் கொண்டு, இரண்டாம் வகுப்புக்குப் பெட்டிக்குப் போய் படுத்துக்கொண்டார். வக்கீலுடைய வாழ்க்கை விவரங்களையெல்லாம் பெரியார் ஆதரவாக விசாரித்தார். இவ்வளவு நல்ல பெரியவர் ஒருவர் இருப்பதை பற்றி வக்கீல் அடிக்கடி தம் ஆச்சரியத்தை தெரிவித்துக் கொண்டிருந்தார்.
திருச்சிராப்பள்ளி நெருங்கிற்று, "உங்களைப்பற்றி நான் இவ்வளவு தெரிந்து கொண்டேன். ஆனால் நான் யார், எந்த ஊர்'' என்று கூட நீங்கள் கேட்கவில்லையே!'' என்றார் பெரியார்.
வக்கீல் சற்று வெட்கப்பட்டார், "உண்மைதான் தாங்கள் யார் என்று தெரியவில்லையே?''
"தாங்கள் கொஞ்ச நேரத்திற்கு முன்பு ராமசாமி நாயக்கன் என்று சொன்னீர்களே... அந்த நாயக்கன் நான்தான்''.
இப்படி சொல்லிப் புன்சிரிப்பு சிரித்துக் கொண்டே பெரியார் ரயிலை விட்டு இறங்கி விட்டார். வக்கீல் அதிர்ந்து நின்றார்.