எந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் எந்திரங்களை விடவும் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறோம். எதற்கெடுத்தாலும் வேகமெடுக்கத் துடிக்கும் இந்த ஃபாஸ்ட்ஃபுட் யுகத்தில், நலமான வாழ்வு என்பது தொடமுடியாத தூரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
நிலைமை இப்படியிருக்க, என்ன செய்தால் உலகை அச்சுறுத்தும் வியாதிகளில் இருந்து விடுபட்டு, நலமுடன் வாழலாம் என்ற பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு ஆய்வுதான், ஒரு புதிய வழியை நமக்குத் தந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள கிழக்கு ஆங்கிலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டூவிக் பென்னட் என்பவர் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை ஒன்றைத் தயார் செய்துள்ளார்.
அதில் இயற்கையோடு இசைந்து வாழ முயற்சிப்பவர்கள் நலமுடன் உணர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நம் நீண்டகால நல்வாழ்வின் மீதான தாக்கம் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை எனவும் அது கூறுகிறது. “இயற்கையோடு நெருக்கமாக வாழ முயற்சிப்பவர்கள், பசுமையை நேசிப்பவர்களை நீரிழிவு நோய், இதயக்கோளாறு, முன்கூட்டியே மரணமடைதல், குறைப்பிரசவம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதோடு, உறங்கும் நேரத்தையும் அதிகரிக்கிறது. அதுவே போதுமான உடல்நலத்தையும் மேம்படுத்துகிறது” என்கிறார் பென்னட்.
இயற்கையை அழித்துவிட்டு செயற்கையான வாழ்வைத் தேடி ஓடினால் அழிவு நிச்சயம் என்பதையும் இந்த ஆய்வறிக்கை சொல்லாமல் சொல்கிறது!