சர்க்கரை நோயாளிகளுக்கு உதவிடும் டயட் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.
நம் உடலின் சர்க்கரை அளவை பரிசோதனை மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். உணவு கொடுத்த பிறகு சர்க்கரை அளவை சோதிக்கும் பரிசோதனையை ஆஸ்திரேலியாவில் செய்தனர். அதை வைத்து ஒவ்வொரு உணவும் எந்த அளவுக்கு சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்பதை அறிந்தனர். சர்க்கரையின் அளவை அதிகமாக ஏற்றும் உணவுகள் என்னென்ன என்பதை நம்மால் எளிதில் அறிந்துகொள்ள முடியும். சர்க்கரை சேர்த்த இனிப்பான உணவுகள் விரைவாக சர்க்கரை அளவை ஏற்றும்.
தானியங்கள் ஓரளவுக்கு சர்க்கரை அளவை ஏற்றும். காய்கறிகள் குறைந்த அளவிலேயே சர்க்கரை அளவை ஏற்றும். சர்க்கரை அளவை ஏற்றும் உணவுகள் குறித்து தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி நம்முடைய உணவுமுறையை நாம் அமைத்துக்கொள்வது நல்லது. கணக்கில்லாமல் அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிடுவதை விட, ஒவ்வொரு உணவிலும் சர்க்கரையை ஏற்றும் தன்மை எந்த அளவில் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு சாப்பிடுவது மிகுந்த நன்மை பயக்கும்.
இறைச்சி, முட்டை, காய்கறிகள், சிறுதானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து மூன்று மாதங்கள் நாம் சாப்பிட்டு வந்தால், எது நம்முடைய உடம்பில் சர்க்கரை அளவை ஏற்றுகின்றது என்பதை நம்மால் நன்கு அறிய முடியும். இதன் மூலம் நம்முடைய உடல் நலனை நாம் பாதுகாக்க முடியும். இதில் எந்த உணவு எந்த அளவுக்கு சர்க்கரையை ஏற்றுகிறது என்பதில் குழப்பமும் ஏற்படலாம்.
அனைத்து வகையான வைட்டமின்கள், புரோட்டீன்கள் ஆகியவை நம்முடைய உடலுக்குத் தேவை. எனவே சர்க்கரை அளவைக் குறைக்கும் உணவுகளை மட்டுமே உண்ணாமல், உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரும் அனைத்து உணவுகளையும் நாம் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். மருத்துவ உலகால் அங்கீகரிக்கப்பட்ட இந்த உணவு முறையை, நாம் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். வீட்டில் மட்டுமல்லாமல், வெளியே சென்று உண்ணும்போதும் இதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இதைப் பின்பற்றுவது சற்று கடினமானது தான். ஆனால் நிச்சயம் முயன்று பார்க்கலாம் என்பது என்னுடைய கருத்து.