வள்ளலார் தந்த ஞான மூலிகையின் மருத்துவ குணம் குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்
கரிசலாங்கண்ணி தான் வள்ளலார் தந்த ஞான மூலிகை. பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கரிசலாங்கண்ணி. வள்ளலார் ஒரு மிகப்பெரிய ஞானச் சித்தர். அவர் சொல்லும் ஞான மருந்துகளில் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது கரிசலாங்கண்ணிக்கு தான். இதை தினமும் நாம் சாப்பிடலாம் என்கிறார் வள்ளலார். உடலுக்குள் இருக்கும் நீர் இதன் மூலம் விரைவில் வெளியேறும். மஞ்சள் காமாலை நோய்க்கு அற்புதமான மருந்தாக இது அமைகிறது. இன்று பலருக்கு பித்தப்பையில் கற்கள் ஏற்படுகின்றன.
கல்லீரல் பிரச்சனை மற்றும் பித்தப்பை கற்கள் ஆகியவற்றை கரிசலாங்கண்ணி மூலம் சரிசெய்யலாம். அதை நாம் இன்று பயன்படுத்துவது மிகவும் குறைவாகவே இருக்கிறது. இனிமேலாவது இதை நாம் அதிகம் பயன்படுத்த வேண்டும். கால்சியம் உள்ளிட்ட நமக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இதில் இருக்கின்றன. மற்ற கீரைகளை நாம் சாப்பிடவில்லை என்றாலும் கரிசலாங்கண்ணியை நிச்சயம் சாப்பிட வேண்டும். கரிசலாங்கண்ணியை பொடியாகச் செய்து தினமும் அதை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மூளையின் செயல்திறனை இது அதிகரிக்கும்.
பால், தேன், நெய் உள்ளிட்டவற்றோடு இதை நாம் சேர்த்து கொடுக்கலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள் கரிசலாங்கண்ணி சாப்பிடலாம். குடிபோதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகப்பெரிய தீர்வாக அமையும். இது நல்ல மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. கண்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்க கரிசலாங்கண்ணி சாப்பிடலாம். பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்தல் பிரச்சனையைத் தீர்க்க கரிசலாங்கண்ணி மற்றும் நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்க்கலாம். கடுக்காய் போன்ற சிறந்த மூலிகை இது.
கரிசலாங்கண்ணி மூலம் தேகம் பொன்னாகும் என்கிறார் வள்ளலார். இன்று நாம் பியூட்டி பார்லர் சென்று உடலை அழகாக்குகிறோம். அதனால் நமக்குப் பலவிதமான அலர்ஜி ஏற்படுகிறது. ஆனால் கரிசலாங்கண்ணி மூலமாகவே நம்மை நாம் அழகாக்கலாம். அவ்வளவு ஆற்றல் மிக்க மூலிகை இது. இதைப் பொரியலாகவும், பொடியாகவும், மாத்திரையாகவும் சாப்பிடலாம். தேனோடு கரிசலாங்கண்ணி சேர்த்து சாப்பிடும்போது ஹார்மோன் பிரச்சனைகள் தீரும், ஹீமோகுளோபின் அதிகரிக்கும். கர்ப்பப்பை பிரச்சனைகளும் கரிசலாங்கண்ணி மூலம் மிக எளிதில் தீரும். வாதம், கபம், பித்தம் ஆகியவை இதன் மூலம் குணமாகும்.