Skip to main content

கம்மியானாலும் பிரச்சனை, அதிகமானாலும் பிரச்சனை... தூக்கமா துக்கமா?    

Published on 16/03/2018 | Edited on 16/03/2018

மார்ச் 16 - உலக தூக்க தினம் 

தூக்கம்... ஆஹா, என்னவொரு வார்த்தை. மனிதனின் இயற்கை உணர்வுகளான கோபம், அழுகை, அச்சம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளில் தூக்கம் என்ற உணர்வும் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டியது. இந்த ரணகளமான அவசர வாழ்க்கையில் ஒரு முழு நாள் கிடைத்தால் கிளுகிளுப்பாக தூங்கலாம் என்று எண்ணாதவர்கள் குறைவே. ஏன் இல்லை... இன்றுதான் (மார்ச் 16) தூக்க நாள்! தூக்கத்துக்குனு ஒரு நாளா!! புது ஐட்டமாக இருக்கே என்று பார்க்கிறீர்களா? 

 

sleeping day 1



ஆம், ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் தேவையான அடிப்படையான ஒன்று. ஒரு மனிதனின் உழைப்பு நேரம், விழிப்பு நேரம் அட்டவணைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதைப்போல கண்டிப்பாக தூக்கமும் அட்டவணைப்படுத்தப்பட்ட ஒன்று. ஒருகுறிப்பிட்ட  நேரம் கண்டிப்பாக மனிதன் தூங்கியாகவேண்டும், இல்லையெனில் உடல் நலம் பாதிக்கப்படும். ''அப்படினா நான் டெய்லி நல்லா சாப்டுட்டு தூங்கி, தூங்கிட்டு சாப்டு ஆரோக்கியமா இருப்பேனே'' என்று பெருமையாக நினைக்காதீர்கள். எப்படி, கண்டிப்பாக தூங்க வேண்டும் என்ற கட்டாய வரையறை இருக்கிறதோ, அதேபோல் அளவுக்கு அதிகமாக தூங்கக்கூடாது என்ற வரையறையும் இருக்கிறது. அதிக  தூக்கத்தால் உடலிற்கு கெடுதலும் உள்ளது. அளவுக்கு அதிமானால் அத்தோவும் விஷம்தானே? 

சிலர் தூக்கம்மில்லாமல் அவதிப்படுவார்கள், சிலர் எப்போதும் ஸ்லீப் மோடிலே இருப்பார்கள்.  இந்த தூக்கம் என்ற விஷயத்தை நம் உடலில் கட்டுப்படுத்துவது மெலட்டோனின் என்ற ஹார்மோன் தான் காரணம். இங்கிலாந்தில் தூக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு சராசரி மனிதன் படுக்கைக்கு சென்ற பிறகு 37 நிமிடங்களுக்கு பிறகுதான் ஆழ்த்தூக்கத்திற்கே செல்வார் என்ற தகவல்  வெளியிடப்பட்டது.  

 

sleep dosorder



ஒரு குழந்தை ஒரு நாளைக்கு கண்டிப்பாக 14-லிருந்து 17மணி நேரம் தூங்க வேண்டும், வளர்ந்த மனிதன் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் 9 மணிநேரத்திற்கு அதிகமாக தூங்குபவர்கள் மன அழுத்த பாதிப்புகள் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக தூக்கத்தால் மூளை சுறுசுறுப்பை இழந்து செயல்பாட்டை இழக்கும். ஒன்பது மணிநேரத்திற்கு அதிகமாக  தூங்கும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை, மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று ஆய்வுகள் விளக்குகின்றன. மேலும் அதிக தூக்கம் உடல் எடையை அதிகரிக்கும். நல்ல உடற்பயிற்சியும் உணவு கட்டுபாடும்  இருந்தால் கூட அதிக நேர தூக்கத்தினால் உடல் பருமன் பிரச்சனைகள் அதிகம் வருகின்றன. அதிகமாக தூங்கும் நோய்க்கு நார்க்கோலெப்ஸி என்று பெயர். 10 முதல் 25 வயது வரை இதன் அறிகுறிகள் இருக்கும். பிறகு ஒரு ஐந்து வருடங்களுக்கு மோசமாக இருக்கும். பின் வாழ்நாள் முழுவதும் தொற்றிக்கொள்ளும் அந்த நோய். சிலர் எதாவது வேலை செய்து கொண்டிருப்பார்கள், ஆனால் திடீரென்று அவர்களுக்கே தெரியாமல் தூங்கி விடுவர்கள். அந்த தூக்கமானது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரைக்கூட தொடரும். இதுவே இந்நோயின் அறிகுறி ஆகும். 

அடுத்து தூக்கத்தை கெடுக்கும் காரணிகளாக, இந்நாட்களில் முக்கியமாக கருதப்படுவது ஸ்மார்ட் போன்கள். இரவு, படுக்கைக்கு சென்ற பிறகு மொபைல் உபயோகிப்பது, லேப்டாப் உபயோகிப்பது போன்றவை கண்ணிற்கு சோர்வைக் கொடுத்து தூக்கத்தை கெடுக்கும். இரவு நேரங்களில் அநேகமாக ஒளி இல்லாத சூழ்நிலையிலேயே நம் படுக்கையறை இருக்க வாய்ப்புண்டு. அந்த சூழ்நிலையில்  ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்பின் ஒளிர்திரையினை உற்று நோக்கும்போது கண்ணையும் பாதிப்பது மட்டுமில்லாமல் தூக்கத்தையும் பாதிக்கும். தூக்க நேரத்தில் நம் கண்ணில் சிவப்பு நிற ஒளிதான் படவேண்டும். ஆனால் ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் நீல நிற ஒளி இன்னும் இரவு வரவில்லை என்ற சமிக்கையை மூளைக்கு அனுப்புகின்றன, எனவே ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் போன்றவற்றை இரவு நேரங்களில் படுக்கைக்கு சென்ற பிறகு உபயோகிப்பதை முடிந்த அளவு என்பதைவிட முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

 

sleeping day



இன்று நம்மில் கணிசமானோர் இரவு ஷிப்ட்களில் கண்டிப்பாக கணினி முன் வேலைசெய்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம். இதுபோன்ற நேரங்களில் சிறிய சிறிய பயிற்சிகள் தொடர்ந்து ஒளிர்திரை பார்ப்பதை விடுத்து சிலமிடங்கள் பார்வையை கணினியின் திரைப்பக்கத்திலிருந்து மாற்றிவைப்பது, இரு உள்ளங்கைகளாலும் இரு கண்களையும் சில நிமிடங்கள் புதைத்து வைப்பது போன்றவற்றை பின்பற்றினால் கண்டிப்பாக கண்சோர்விலிருந்தும்  தூக்கம் கெடுக்கும் காரணிகளில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ளலாம்.

அப்புறமென்ன... அருமையான தூக்கம், அளவான தூக்கம், ஆரோக்கியமான தூக்கத்துடன் வாழ வாழ்த்துக்கள்! ஹேப்பி ஸ்லீப்பிங் டே.......